இரண்டரை மாதக் குழந்தை கிணற்றில் வீசிக் கொலை!! யாழ் வடமராட்சியில் கொடூரம்!!(Photos)

இரண்டரை மாதம் நிரம்பிய பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான்.

இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என்று தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார், தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.இரண்டரை மாத ஆண் சிசு கிணற்றுக்குள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தாயார் மாறுபட்ட இரு வாக்குமூலங்களை வழங்கிய நிலையில் அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் இரண்டரை மாதம் நிரம்பிய அஜந்தராஜ் அஸ்ரின் என்ற சிசு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து சிசுவின் தந்தையும் தாயாரும் கைது செய்யப்பட்டனர். எனினும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் தந்தையார் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டார். தாயார் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சிசுவின் தந்தையாருக்கு 22 வயதும் தாயாருக்கு 20 வயதுமாகும். அவர்களுக்கு 2 வயதில் மூத்த ஆண் பிள்ளை ஒன்று உள்ளார். அந்தக் குழந்தைக்கு உடல் நலக்குறை உள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிசுவின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, உடற்கூற்றுப் பரிசோதனையை முன்னெடுத்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் சிசு தண்ணீருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்தது என்று கண்டறியப்பட்டது. சிசுவின் உடலில் வெளித்தோற்றமாகவோ, உள்புறமாகவோ காயங்கள் எவையும் இல்லை எனவும் தெரியவந்தது.

பொலிஸாரிடம் முதல் தடவை வழங்கிய வாக்குமூலத்தில் தாயார் தெரிவித்ததாவது:

“கணவர் இரவு தங்கல் வேலைக்கு பளைக்குச் சென்று விடுவார். அதனால் நானும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருப்போம். வீடு திறந்த நிலையில்தான் உள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் எனது காலில் ஒருவர் தடக்கப்பட்டது போன்று உணர்ந்தேன். எழுந்து பார்த்த போது, இருவர் வீட்டுக்குள் நுழைந்திருந்தனர். அவர்கள் புறாக்களைக் கொள்ளையிட வந்திருக்கலாம் என நினைத்து அவர்களைத் துரத்தினேன். அதன்பின்னர் படுக்கைக்கு வந்து பார்த்த போது குழந்தையைக் காணவில்லை.

அதனால் நான் கதறி அழுதபோது அயலவர்கள் வந்து தேடிய போது குழந்தை கிணற்றுக்குள் மிதந்தது” என்று குறிப்பிட்டார்.

எனினும் சட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் வழங்கிய வாக்குமூலத்தில் தாயார் தெரிவித்ததாவது:

“நான் சின்ன வயதிலிருந்து வறுமையிலேயே வாழ்ந்துவிட்டேன். கணவர் இரவு தங்கல் வேலைக்குச் செல்பவர். அதனாலும் வருமானம் குறைவு. இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் பெரும் துன்பங்களை எதிர்நோக்கினேன்.

முதலாவது குழந்தை நிறை குறைபாட்டுடன் உள்ளதால் நடக்கமாட்டார். இரண்டாவது குழந்தைக்கு தலையில் கிரந்தி உள்ளது. அதனால் இரண்டாவது குழந்தை கடந்த சில நாள்களாக இரவிவ் ஒரே அழுதபடி. எனக்குத் தூக்கமும் இல்லை.

நேற்றிரவும் குழந்தை ஒரே அழுதபடி இருந்ததால் எனக்குத் தாங்க முடியாமல் குழந்தையைக் கொண்டு சென்று கிணற்றில் போட்டுவிட்டேன். வேதனை தாங்க முடியாமல் வீட்டுக்குள் வந்திருந்து அழுதுவிட்டு மீளவும் சென்று கிணற்றைப் பார்த்த போது குழந்தை மிதப்பதைப் பார்த்தேன்.

அதன்பின்னர் கதறி அழுத போது அயலவர்கள் வந்தனர்” என்று கூறினார்.
இந்த நிலையில் தாயாரே குழந்தையைக் கொலை செய்திருக்க முடியும் என்ற பலத்த சந்தேகம் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கொல்லப்பட்ட சிசுவின் தாயாரை உளநல மருத்துவ நிபுணரிடம் முற்படுத்தி அவரது உளநலச் சான்றிதழ் பெறப்படவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *