காணி சுவீகரிப்புக்கு சென்ற அதிகாரிகளை திருப்பியனுப்பிய பொதுமக்கள்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உள்பட்ட மாதகல் – பொன்னாலை வீதியில் தனியார் காணிகளை கடற்படை முகாமுக்கு அபகரிப்பதற்காக இன்று அளவீடு செய்ய வருகை தந்த அதிகாரிகள் பிரதேச மக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றுள்ளனர்.

சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக நேற்றையதினம் தகவ்ல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இதனை அறிந்த உள்ளூர் மக்கள் இன்று காலை 8 மணியளவில் குறித்த பகுதியில் ஒன்று திரண்டனர்.

இதன்போது வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அங்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வருகை தந்திருந்ததோடு காணி அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்காரணமாக மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக் கொண்டு குறித்த அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் திரும்பிச்சென்ற அதிகாரிகள் மீள வரலாம் என எதிர்பார்க்கும் பிரதேசமக்கள் அங்கிருந்து அகலவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *