இராணுவ முகாமில் சித்திரவதையில் உயிர் தப்பியவர் 8 ஆண்டுகள் கழித்து அம்பலபடுத்திய உண்மை!

மாவீரர் நாளை ஒட்டி மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டி கைது செய்து சித்திரவதைக்கு உள்ளான தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி கிடைத்துள்ளதாக கூறியிருக்கும்

புன்னாலைகட்டுவன் பகுதியை சோ்ந்த து.லோகேஸ்வரன் என்பவர், தம் மீதான பொய் குற்றச்சாட்டு மற்றும் சித்திரவதை, கொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பலர் இன்னும் வெளியில் இருக்கும் நிலையில் தப்பியுள்ள இந்த குற்றவாளிகளுக்கும் தண்டணை வழங்கப்படவேண்டும்.

என கேட்டுள்ளதுடன் தாம் சுதந்திரமாக வாழ வழி செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

2011ம் ஆண்டு கார்த்திகை மாதம் 21ம் திகதி பெற்றோரை இழந்த பாடசாலை மாணவர்களுக்காக 110 புத்தக பைகளை தற்போதைய யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் வழங்கியிருந்தார். அதனை நானும், சுமணன் உள்ளிட்ட சிலரும் இணைந்து மாணவர்களுக்கு வழங்கினோம்.

அப்போது அங்குவந்த இராணுவ புலனாய்வாளர்களும், மாவீரர் நாளுக்காக புத்தக பைகளை வழங்குகிறீர்களா? என கேட்டிருந்தனா். ஆனால் அப்படியான நோக்கத்தில் நாங்கள் புத்தக பைகளை கொடுக்கவில்லை. என்பதை அப்போதேகூறியிருந்தோம்.

பின்னர் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர், மற்றும் பொலிஸார் வீடொன்றுக்குள் புகுந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டியில் என்னையும், சுமணனையும் கைது செய்தார்கள்.

கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட வீட்டின் உாிமையாளரான பெண், அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மிக நெருக்கமான உறவை பேணிய ஒருவர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு நேரடியாக ஊரெழு இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நாம் அங்கு தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.

எனது உடலில் மின்சாரம் பாய்ச்சினார்கள், சூடேற்றப்பட்ட கம்பிகளால் சுட்டார்கள், பிளேட்டுகளால் வெட்டினார்கள்.

பின்னா் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கும் சித்திரவதை மேற்கொண்ட நிலையிலேயே சுமணன் உயிரிழந்தார். பின் 5 நாட்கள் கடந்த நிலையில் 2011 காா்த்திகை 26ம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டோம்.

களவு எடுத்ததாக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விடயத்தை நாங்கள் நீதிபதிக்கு கூறியதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

மறுபக்கம் சுன்னாகம் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் நெருக்கமான உறவை பேணிய பெண் ஆகியோரினால் சோடிக்கப்பட்ட கொள்ளை வழக்கும் பொய் வழக்கு என்பது நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் மீது இழப்பீடு கோரி சிவில் வழக்கு தொடருமாறும் நீதிபதியால் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நீதி எமக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், சித்திரவதை மற்றும் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட பலர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கின்றாா்கள்.

2018ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய தலையில் துப்பாக்கியை வைத்து சாட்சி சொல்வதற்காக செல்லகூடாது என அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி இன்னும் வெளியில் நடமாடுகிறார்.

மேலும் கடந்த வருடத்தின் கடைசிவரையில் புலனாய்வாளர்கள் என்னை நின்மதியாக வாழவிடவில்லை. இது மோசமான இன அழிப்பு எப்படி நடந்தது என்பதற்கு உதாரணமும் கூட.

அதேபோல் புத்தக பைகளை வழங்கிய இப்போதைய யாழ்.மாநகர முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரும், எங்கள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

5 பிள்ளைகளுடன் என்னுடைய மனைவி இவா்களிடம் உதவி கேட்டபோது இவர்கள் தொலைபேசியை ஓவ் செய்து வைத்தவா்கள்.

ஆனால் சட்டத்தரணி மணிவண்ணன் ஒரு ரூபாய் பணமும் கேட்காமல் 8 வருடங்கள் வழக்கை நடாத்தி நீதியை பெற்றுக் கொடுத்தார் என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *