ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றது! சுமந்திரன் எம்.பி வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே, கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவு செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும்.

தேசியப் பிரச்சினைக்கான தீர்வு மேலும் தாமதிக்கப்படக் கூடாது. ஏற்கனவே பல ஆவணங்கள் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்.

இணங்கிக் கொள்ளப்பட்ட அவ்வாறான ஆவணங்களில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனையும் உள்ளடங்கியுள்ளது.

இந்நிலையில், எந்த ஒரு வேட்பாளருடன், பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை போன்ற ஏனைய கோரிக்கைகளும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், தேசியப் பிரச்சினைக்கான தீர்வே பிரதான கோரிக்கையாக இருக்கும்” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *