முல்லைத்தீவில் காணியற்றோருக்காக வீ.ஆனந்தசங்கரி மேற்கொண்டுள்ள நடவடிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த காணியில் 1988ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்கு கிடைக்காமையினால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த காணியில் மக்கள் குடியிருக்கின்றமையை அறிந்த வீ.ஆனந்தசங்கரி இதுவரை குறித்த காணியை மீள பெற்றுத்தருமாறு அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கவில்லை.

அந்தவகையில், குறித்த காணியில் குடியமர்ந்துள்ள மக்கள் நேற்று முந்தினம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து பாதிக்கப்பட்ட தமக்கு காணியை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் வேறு காணிகள் இன்றி எனது காணியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் சட்ட ரீதியாக குறித்த காணியில் ஆட்சி செய்யாவிடினும் அவர்களின் பாதிப்பு நிலையை தான் உணர்வதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எனது காணியில் குடியிருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் தன்னை சந்தித்து காணிகளை பகிர்ந்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்களின் இந்த துன்பமான நிலையில் வேறு இடங்களிற்கு அனுப்பி காணியை பெற்றுத்தர கோரும் மனநிலை எனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், எனக்கு சொந்தமானதென குறித்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள காணியை, அங்கு குடியிருக்கும் மக்களிற்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிற்கு வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

காணி அற்றோர்கள் என உண்மையாக அடையாளம் காணப்படும் நபர்களிற்கே குறித்த காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ள வீ.ஆனந்தசங்கரி, இதற்காக அடையாளம் காணும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் எழுத்துமூலமான ஆவணத்தை ஓரிரு நாட்களில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் பிரதேச செயலாளரிற்கு தெரிவித்துள்ளார்.

மக்களின் நிலையை உணர்ந்து எனக்குரித்தானது என கூறப்படும் குறித்த காணியை பகிர்ந்தளிக்க முன்வந்துள்ள நிலையில், அங்கு குடியமர்ந்துள்ள மக்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பிரதேச செயலாளரிடம் கோரியுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *