கிளிநொச்சியில் பல மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 105 வேலைத்திட்டங்கள் சுமார் 130.42 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தமது திணைக்களத்தின் ஊடாக 105 வேலைத்திட்டங்கள் 130.42 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் ஊடாக சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும உவர் நீர்த்தடுப்பணைகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் 50 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

கமநல அபிவிருத்திணைக்களம் ஊடாக வாய்க்கால் புனரமைப்பிற்காக 18 மில்லியன் ரூபாவும், ஏனைய அபிவிருத்தி வேலைகளுக்காக 5.2 மில்லியன் ரூபாவும், விவசாய வீதிகள் வாய்க்கால்களை புனரமைப்பதற்கு 20 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஊழியர் நிதியத்தின் ஊடாக நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைப்பதற்கு 17.22 மில்லியன் ரூபாய் உள்ளடங்கலாக ஏனைய வேலைகளுக்குமாக இவ்வாறு 130.42 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்று அதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *