வடக்கு கிழக்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமான NEPL பிறீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டி

2019ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பருவகால வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள மைதானங்களில் இன்று உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில், தற்பொழுது வவுனியா நகரசபை மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டியில் மாதோட்டம் அணியும் அம்பாறை அவென்ஜஸ் அணியும் மோதுகின்றன.

அத்துடன், மட்டக்களப்பு வேவர் மைதானத்தில் மட்டுநகர் சூப்பர் கிங் மற்றும் வவுனியா வொரியஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம விருந்தினராகவும், இலங்கை உதைப்பந்தாட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.டி.பாருக், மட்டக்களப்பு மாநகராட்சி உப மேயர் கே.சத்தியசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் துரையப்பா மைதானத்தில் இன்று மாலை 06 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த போட்டியில் டில்கோ கொங்கியூரஸ் அணி மற்றும் நொதேர்ன் அலைற் ஆகிய அணிகள் மோத உள்ளன.

இந்த சுற்றுப்போட்டி 60 லீக் போட்டிகளை கொண்டதாக அமைய இருப்பதுடன், போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் NEPL குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்படுவோருக்கு யஸோ மோட்டேர்ஸ் வழங்கும் 5,000 ரூபாய் பணப் பரிசுடன் க்ராவ்ரறி நிறுவனத்தினர் வழங்கும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட உள்ளது.

போட்டிகள் அனைத்தையும் ஐ.பி.சி தமிழின் பிரதான அனுசரணையில் தமிழர் உதைபந்தாட்ட பேரவை நடத்திக் கொண்டிருக்கின்றன.

வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் சுற்றுப் போட்டிக்கு அண்மையில் 143 வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பிருந்த நிலையில், 113 வீரர்கள் அரைக் கோடிக்கும் மேலான பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

வவுனியா நகரசபை மைதானத்தில் அம்பாறை அவென்ஜஸ் மற்றும் மாதோட்டம் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் அம்பாறை அவென்ஜஸ் அணி 4 இற்கு 3 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியிருக்கின்றது.

ஐ.பி.சி தமிழ் வழங்கும் 25,000 ரூபாய் பணப்பரிசினையும் அம்பாறை அவென்ஜஸ் அணி தட்டி சென்றிருக்கிறது.

அந்த அடிப்படையில், இலக்கம் ஒன்பதைச் சேர்ந்த எஸ்.எம்.நுபாயிஸ் என்கின்ற அம்பாறை வீரர் இன்றைய ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் துரையப்பா மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள டில்கோ கொங்கியூரஸ் மற்றும் நொதேர்ன் அலைற் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வருகை தந்து வீரர்களை வாழ்த்தியிருக்கிறார்.

அந்த வகையில், மட்டக்களப்பு வேவர் மைதானத்தில் மட்டுநகர் சூப்பர் கிங் மற்றும் வவுனியா வொரியஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டி சமநிலையில் இரண்டுக்கு இரண்டு என்ற அடிப்படையில் நிறைவுக்கு வந்துள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *