ஐபிஎல் ஆடுகளத்தில் நரேந்திர மோதிக்கு எதிராக ”சௌக்கிதார் சோர் ஹை” கோஷம் கிளம்பியது உண்மையா?

விஷயம் என்ன? – கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் மோதிய போது அங்கு போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள், ‘சௌக்கிதார் சோர் ஹை’ என இந்தியில் கோஷமிட்டதாக கூறப்படும் 24 நொடிகள் ஓடும் காணொளி ஒன்று இணையத்தில் மிகவும் பிரபலமானது. சௌக்கிதார் சோர் ஹை என்பது காவல்காரன்தான் திருடன் எனப் பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

ஐ.பி.எல் 2019ன் நான்காவது போட்டி ஜெய்ப்பூரின் சவாய் மன்சிங் ஆடுகளத்தில் நடந்தது. அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி நடக்கும்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சௌக்கிதார் சோர் ஹை என கோஷம் எழுப்பியதாக ஒரு காணொளி பரவியது.

அந்த காணொளியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் கிரீஸில் இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் பந்து வீச தயாராகிறார். அந்தச் சமயத்தில் சௌக்கிதார் சோர் ஹை (காவல்காரன்தான் திருடன்) என்ற கோஷம் இருப்பதைக் கேட்கமுடிகிறது.

இந்த பிரபலமான காணொளியில் ஐந்து முறை இந்த கோஷம் இருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தன்னை நாட்டின் காவலன் எனக்கூறிக் கொள்கிறார். மேலும் இந்தியா பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என உறுதியாக கூறுகிறார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபால் விவகாரம் தொடர்பாக பேசுகையில் மோதியை ”சௌக்கிதார் சோர் ஹை” என விவரித்திருந்தார்.

ஜெய்ப்பூர் போட்டி காணொளியானது பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ட்விட்டர், ஃபேஸ்புக், ஷேர்சாட் போன்றவற்றில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்.

லலித் டேவிசி எனும் ஒரு ட்விட்டர் பயனர் ” இந்த காணொளியில் உள்ள நேரத்தை கவனியுங்கள். 2014 ஐபிஎல்லில் மோதி-மோதி என எழுந்த கோஷங்களை எடுத்துவிட்டு சௌக்கிதார் சோர் ஹை கோஷத்தை இணைந்திருக்கிறார்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த காணொளி ஆறு வெவ்வேறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் பரவியது. ஆனால் அவர்கள் கூறுவது உண்மைக்கு மாறானது.

உண்மை என்ன?

ஜெய்ப்பூரில் இப்போட்டி இரவு எட்டு மணிக்குத் துவங்கியது. அப்போது விளையாட்டரங்கில் சுமாரான கூட்டமே இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

போட்டியின் முதல் இன்னிங்சில் 14-வது ஓவரில் அறிவிப்பாளர் ”அவர் ஜெயிப்பார், அவர் ஜெயிப்பார்” எனச் சொல்ல அங்கிருந்த ரசிகர் கூட்டம் ”ராஜஸ்தான் ஜெயிக்கும் ராஜஸ்தான் ஜெயிக்கும்” என கோஷம் எழுப்பியது. 

ஆட்டத்தின் 15 மற்றும் 17வது ஓவரில் இதே போன்ற கோஷங்கள் தொடர்ந்தது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் ஆட்டத்தின் 18 வது ஓவரில் முதல் பந்தை வீசிய போது ஸ்டேடியத்தில் வடக்கு முனையில் இருந்து மோதி -மோதி என்ற கோஷங்கள் கேட்டன.

ஸ்டேடியத்தில் மேற்கு ஸ்டாண்டில் இருந்து போட்டியை பார்த்த 23 வயது பி.டெக் மாணவர் ஜெயந்த் சூபெ ”விளையாட்டரங்கில் நுழைவதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க அளவில் பரிசோதனை நடந்தது. எந்தவொரு அரசியல் ரீதியான பொருள்களும் உள்ளே எடுத்து வர அனுமதியில்லை. ஆட்டத்தின் ஆரம்பகட்டத்தில் இசை மிகவும் அதிக சத்தத்தில் இருந்தது. ஆனால் 18-வது ஓவரில் கோஷங்கள் தெளிவாக கேட்டன” என்றார்.

ஜெயந்த் யாதவ் ஆட்டத்தின் 18-வது ஓவரில் இரண்டாவது பந்தை வேசியபோது பஞ்சாப் பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் ஜெயதேவின் பந்தை அடித்த பிறகு கோஷங்கள் மாறியது.

கூட்டத்தில் இருந்து சத்தமாக ஒரு குரல் கேட்டது. ”சௌக்கிதார் சோர் ஹை” என அவர் கூற, அந்த கோஷத்தை திரும்ப திரும்ப ஐந்து முறை எழுப்பியதுஅக்கூட்டம் .

இந்த போட்டியின் முழு காணொளியும் ஹாட்ஸ்டாரின் அதிகாரபூர்வ வலைதளத்தில் காண கிடைக்கிறது.

ஆக சௌக்கிதார் சோர் ஹை என்ற கோஷம் மோதி-மோதி என்ற கோஷத்துக்கு எதிர்வினையாக எழுப்பப்பட்டது என்பது தெளிவு. ஸ்டேடியத்தில் சௌக்கிதார் சோர் ஹை என்ற கோஷம் மட்டுமே எழுப்பப்பட்டது என கூறுவது தவறானதாகவே இருக்கமுடியும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *