யாழில் வீடொன்றுக்குள் வாள்கள், கம்பிகளுடன் புகுந்த ரவுடிகள் அட்டகாசம்!

யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.

நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்த நிலையில், அங்கு இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய குழு சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

இதனையடுத்த அந்த பகுதியால் சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறப்படும் நபர்களை கண்டதும் அங்கு குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது.

இந்நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறிய நபர்கள் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுங்கள், என ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

அதற்கமைய இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும், வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை ரவுடிகள் எடுத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டார் கூறியதுடன், வீட்டிற்குள் ரவுடிகள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தொியப்படுத்தியும் அவர்கள் சம்பவ இடத்திற்கு நீண்ட நேரமாக வந்திருக்கவில்லை எனவும் வீட்டார் குற்றம் சாடியுள்ளனர்.

எனினும் பின்னர் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *