யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் விரைவில் கணினி மயப்படுத்தப்படும்! – மேயர் நம்பிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணினி மயப்படுத்தப்படும் என்று யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நாம் கணினி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலேயே யாழ். மாநகர சபையின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக இணையவழி மூலம் கணணி மயப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் மிக காத்திரமான பணியின் ஒரு பகுதியை இன்று நாங்கள் அடைந்துள்ளோம்.

அத்துடன் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு இணையத்தின் ஊடாக பொதுமக்கள் தமது சேவையை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளக்கூடியவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையத்தளமானது பொதுமக்கள் தமக்குரிய சேவைகளை வீடுகளில் இருந்தவாறே இணையத்தினூடாக முழுமையாகப் பெற்றுக்கொள்ள கூடியவாறாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமது பதவிக் காலம் விரைவில் முடிந்து விட்டாலும் எதிர்வரும் காலத்தில் இந்த மாநகர சபையைப் பொறுப்பேற்கும் நிர்வாகமானது முழுமையாக இணையமயமாக்கப்பட்ட மாநகர சபையாகப் பொறுப்பேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *