யாழ் கேரதீவு பகுதியில் திட்டமிட்டு சுற்றாடல் பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றதா?

யாழ் கேரதீவு பகுதியில் திட்டமிட்டு சாவகச்சேரி பிரதேச சபை சுற்றாடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சுமார் 150 அடி நீளத்தில் புதிதாக கழிவு முகாமைத்துவத்துக்கான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளபோதிலும், அப்பகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில்

பிரதேச சபை அக்கறை செலுத்தவில்லை என்பதே உண்மையாகும். குறித்த பாதுகாப்பு அமைவிடத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டுள்ள நிலையில், அதை அண்மித்த பகுதியில் திண்ம கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. குறித்த கழிவுகளை கால்நடைகள் உணவாக உட்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான நிலை தொடரின் கால்நடைகள் உயிரிழக்க நேரிடும் என்பதுடன், பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ளும் அபாயமும் காணப்படுகின்றது.

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியின் அருகில் காணப்படும் நிலையில் அப்பகுதி துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் நுளம்பு, இலையான் உள்ளிட்ட நோய் காவிகள் பெருகும் அபாயமும் காணப்படுகின்றது.

இதேவேளை, உக்கும் உக்காத பொருட்கள் என தரம் பிரிக்கப்படாது ஒரே இடத்தில் கொட்டப்படுவதுடன், தீ மூட்டப்பட்டு சுற்று சூழவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றனர்.

நவீன உலகில் மீள்சுழற்சி, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் ஊடாக சுற்றாடலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொறுப்பு வாய்ந்த அரச நிர்வாகத்தினர் இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவதை தவிர்த்து, கடல், நிலம், காற்று மாசடையாமலும், கால்நடைகள், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *