விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கடத்தல்களுடன் தொடர்பு! – இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தியதாக இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் புலிகளுக்கு தொடர்பு உண்டு என இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்றில் இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

சுரேஸ் ராஜ் மற்றும் சௌந்தராஜ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது இவர்கள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது என இந்தியாவின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தமிழகம், இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் புலி தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினர் அரேபிய கடலில் வைத்து இலங்கை மீன்பிடிப் படகினை கைப்பற்றியிருந்தனர். இந்த படகில் போதைப் பொருள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்த படகில் பயணித்த ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலைப் புலி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதைப் பொருள், தங்கம் கடத்தல் மற்றும் ஹாவாலா கொடுக்கல் வாங்கல்களின் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *