வடமாகாண ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு

வடமாகாண ஆசிரியர்கள், தொடர்ந்தும் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

வடமாகாணத்தின் யாழ்ப்பாண பணிமனையில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் வேதனப் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாது, தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, ‘வடமாகாணத்தில் முழுமையாக நிகழ்நிலைக் கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தமையை மறுக்கும் முகமாகவே இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்த கருத்தின் மூலம் இனவாதத்தைத் தூண்டி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 6ஆம் திகதி ஆசிரியர் தினத்தன்று வடமாகாணத்தின் சகல கோட்ட மட்டத்திலும் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண செயலாளர் புயல்நேசன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண வலய செயலாளர் குலேந்திரன் வெள்வின், கிளிநொச்சி வலயக்கல்வி செயலாளர் பொன்னுத்துரை காண்டீபன், மாவட்ட பிரதிநிதி பரமசிவம் கஜமுகன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்வின்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *