வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

வடக்கு மாகாணத்துக்கு கிடைத்துள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் கொவிட் தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இரண்டு லட்சம், வவுனியா மாவட்டத்துக்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த நான்கு மாவட்டங்களிலும் இத்தடுப்பூசியானது 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 ஆம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. யாழ் மாவட்டத்தில் நாளை முதல் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்துக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும்.

இத் தடுப்பூசியானது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், ஏனைய மாகாணங்களிலும் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு அவர்களது வதிவிடம் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

இவர்கள் தமது ஆசிரிய பணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதோடு முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசியானது ஜூலை 30ஆம் திகதி இரண்டாம் நாள் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்கள் தமது பிரிவுக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு தமக்கான தடுப்பூசி வழங்கும் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் தடுப்பூசி வழங்கப்படும். இத் தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்துக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்துக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நோயளர்களின் விபரங்களை அவர்களை பராமரிப்பவர்கள் அப்பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேலும் அவர்களுக்கான தடுப்பூசியானது தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இறுதி நாட்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *