யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் பதவி விலகினார்!

யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா தனது பதவி விலகல் கடிதத்தினை கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சியமைத்தது.17 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகரசபையில் 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கோணலிங்கம் கருணானந்தராசா முன்னிறுத்தப்பட்டு, ஈபிடிபி உறுப்பினர்கள் இருவர் மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரது ஆதரவுடன் 9 ஆதரவு வாக்குகள் மூலம் தலைவராக தேர்வு செய்யபட்டிருந்தார். இந்நிலையில், எதிர்வரும் ஜூலை-31 ஆம் திகதியுடன் பதவி விலகும் கடிதத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கோணலிங்கம் கருணானந்தராசா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

கூட்டணி கட்சி தரப்பினருக்கு சுழற்சி முறையில் நகரசபை தலைவர் பதவியை வழங்கும் உடன்பாட்டிற்கு அமைவாகவே இவ்வாறு கோணலிங்கம் கருணானந்தராசா தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த கோணலிங்கம் கருணானந்தராசா இடைப்பட்ட காலத்தில், கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தரப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *