தமிழ்த் தேசிய அரசியல் தலைமைஅத்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஒருசில தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் அத்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழ் அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இப்போதாவது இது நடந்திருப்பதைக் குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அதேபோல் தமிழ் அரசியலைப் பற்றி கரிசனையடையவர்கள் சந்தோஷமடைய வேண்டியதுமாயிருக்கின்றது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் முழுமையாக 93 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். சாதாரணமாக ஒவ்வொரு பொசன் மற்றும் வெசாக் நாட்களில் இது நடைபெறும் விடயமாக இருந்தாலும் வியாழக்கிழமை நடந்த விடயத்திலிலுள்ள விசேட விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அரசியல் வரலாற்றில் அரசியல் நியமங்களின்படி கைதிகளை விடுவிப்பதானது இருதரப்பினருக்கு இடையே இடம்பெறுகின்றதாகும். அது போர்க் கைதிகள் அல்லது வேறு கைதிகளாகவும் இருக்கலாம். கைதிகளை விடுவிக்கின்ற முக்கிய கலாசாரத்தின் நோக்கம் என்பது, விழுந்திருக்கின்ற அல்லது இல்லாமல் போயுள்ள உறவை வளர்த்தெடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சியாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த இம்முயற்சி பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை விவாதிக்கப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ச, தன்னுடைய வாழ்கையில் சிறையில் அனுபவித்த கண்ட கதைத்த தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வேதனையை உணர்ந்தவராக பிரேரணையை முன்வைத்தார்.

முதன்படி ஜனாதிபதிக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் எனது நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

நீண்டகாலமாக சிறைகளில் பெற்றோர், பிள்ளைகளை இழந்து இருந்த அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரே கூரைக்குள் இரவு உணவை அருந்தியிருப்பார்கள். அதன் பின்னணியில் இன்னுமொரு விடயம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நடந்துகொண்ட விதம் துக்ககரமாகவே இருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்தாலும்கூட நான் ஆளுநராக இருந்த காலத்திலும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்ட முயற்சிகளின் பேரில் இந்த விடயம் இடம்பெற்றிருப்பதை தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் ஏற்க மறுக்கின்றனர்.

சில நேரங்களில், இப்படியான முக்கிய கேந்திர அரசியல் தீர்வுகளைக் காணும்போது, அவர்களுடைய எதிர்கால அரசியல் வெறுமனே நின்றுவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருக்கின்றதோ என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அரசியல் கைதிகள் இன்னும் பலர் உள்ளனர். 106 பேர் இன்னும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் நாங்கள் விடுதலை செய்ய வேண்டும். அதற்கான பேச்சை நடத்த வேண்டும்” – என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *