கொழும்பு வீதியில் 8 நாட்களேயான குழந்தையுடம் நின்ற பொற்றோர்! உதவிய இராணுவம்

வழமையாக ‍பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள் பலரும் தற்போது நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளதால் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வதற்கும் மீண்டும் வீட்டுக்கு திரும்புவதற்கும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

பொதுப்போக்குவரத்து இல்லாத காரணத்தால் இவர்கள் நடந்து சென்‍றே தமது தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

இந்நிலையில், இளம் வயது தாயும் தந்தையும் பிறந்த எட்டு நாட்களேயான தமது கைக்குழந்தையுடன் கொழும்பு ஆமர் வீதி சந்தி வீதியோரமாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போக்குவரத்துக்காக வாகனம் ஒன்றை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர் என்று எனக்குத் தெரிந்தது.

மருதானை பக்கமாகவே சென்றுகொண்டிருந்த நான், ஆமர் வீதி சந்திக்குச் செல்லும் பக்கமாக நின்று கொண்டிருந்த அவர்கள் பக்கத்துக்கு வந்து, அவர்களுடன் உரையாட முயற்சித்தபோது இராணுவ வாகனம் ஒன்று அவர்கள் அருகே வந்து நின்றது. அதிலிருந்த மூன்று இராணுவம் கீழே இறங்கி அவர்களுடன் பேச ஆரம்பித்தனர். இந்த உரையாடலின்போது, அவர்களின் குழந்தைக்கு 8 நாட்களாகின்றன.

அவர்களின் ஊர் நிட்டம்புவ என்றும், அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு வாகனம் ஒன்றுக்காக காத்துக் கிடப்பதாகவும் தெரிவித்தனர். மிகவும் கவலையுடன் காணப்பட்ட அவர்களை பார்ப்பதற்கே ரிதாபமாக, அதுவும் அந்த பிஞ்சுக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தமை வேதனையாகவிருந்தது.

நீங்கள் கொழும்பு வந்ததற்கான காரணம் என்ன? எப்படி வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டதற்கு, எமது குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றும் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு (நோனா வார்ட்) எமது ஊரிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக வந்தோம்.

சிகிச்சை முடிந்து ஊர் செல்வதற்கு முடியாது தவித்திருந்தபோது, முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தான் மட்டக்குளி நோக்கி பயணிப்பதாகவும், ஆமர் வீதி சந்தியில் அதிகமான வாகனங்கள பயணிக்கும், அங்கிருந்து ஏதேனும் வாகனத்தில் உங்களது ஊருக்கு போக முடியும் என கூறி இந்த இடத்தில் (ஆமர் வீதி சந்தி) எங்களை இறக்கிவிட்டார் எனக் கூறினர்.

இந்த நிலையில், இவர்களுக்கு உதவி செய்யும் முகமாக குறித்த இராணுவம் ஏதேனும் வாகனங்கள் அந்த வழியாக செல்லுமா என வீதியில் சென்ற வாகனங்களை நிறுத்திக் கேட்டனர். இவ்வாறு 10 நிமிடங்களுக்குப் பின்னர் , அந்தப் பக்கமாக கபில நிற சிறிய ரக லொறி ஒன்று வந்தது.

வாகனத்தை வழிமறித்து அதிலிருந்த சாரதி மற்றும் உதவியாளரிடம் சம்பவத்தைக் கூறி உதவி கேட்டோம்.

அவர்கள் கட்டுநாயக்க பக்கமாக செல்வதாகவும், மினுவங்கொடையில் இறக்கி விடுகிறோம் என ஆரம்பத்தில் கூறியிருந்தபோதிலும், அந்த பிஞ்சுக் குழந்தையினதும், இளம் தாயின் நிலை அறிந்தும் அவர்களை நிட்டம்புவையிலுள்ள அவர்களின் வீட்டுக்கே சென்று இறக்கி விடுவதாக தெரிவித்தும், எமக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது. அந்த வாகனத்தில் சாரதி ஆசனமும் அதற்கு அருகாமையிலுள்ள முன்பக்க ஆசனமும் மாத்திரமுமே இருந்தன.

இந்நிலையில், சாரதி ஆசனத்துக்கு அருகிலுள்ள ஆசனத்தில், தாயுடன் பிஞ்சுக் குழந்தையை ஏற்றிவிட்டு, வாகன உதவியாளர் , குழந்தையின் தந்தை இருவரும் பின்பக்கமாக ஏறி அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு இராணுவம் பண உதவிகளை வழங்கியதுடன், அறிவுரைகளையும் கூறினர்.

இராணுவத்தினர்களுக்கு கண்ணீர் கலந்த நன்றிகளை தெரிவித்ததுடன், அந்த லொறி அவ்விடத்தை சென்றதும், இராணுவத்தினர் தங்களது வாகனத்தில் ஏறி சென்றனர்.

வீதியோர சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த பெண்கள் இருவரும் , மேலதிக சில விடயங்களை எனக்கு கூறினர். அவர்கள் பிஞ்சுக் குழந்தையுடன் வாகனமொன்றுக்காக ரொம்ப நேரமாக காத்து நின்றனர். ஒரு வாகனம் கூட நிறுத்தவில்லை. பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

மிகவும் களைப்புற்ற அவர்கள் இங்கேதான் மதிய உணவையும் சாப்பிட்டனர். குழந்தையையும் எங்களுக்கு காட்டி, தொப்புக் கொடி அகற்றியமையை எங்களுக்கு காட்டினர். மிகுந்த கவலையடைந்த நாங்கள், எங்களால் முடிந்த பண உதவிகளை நாம் அவர்களுக்கு வழங்கினோம் என அந்தப் பெண்கள் இருவரும் மகிழ்ந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *