யாழில் அதிக குடிமக்கள் திரண்டதால் ஏற்பட்ட வினை

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதையடுத்து, பல பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதேபோல, கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று, யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில், யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், முகக்கவசம் அணியாமல் நடமாடித் திரிந்தவர்கள் அள்ளிச் செல்லப்பட்டனர்.

எனினும், நேற்று இரவே அவர்கள் அறிவுரை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதேபோல, சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 4 கள்ளுத்தவறணைகள் ஊர்காவற்துறை, காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டன.

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 கள்ளுத்தவறணைகள் கடந்த இரண்டு நாட்களில் மூடப்பட்டுள்ளன. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு தவறணை மூடப்பட்டுள்ளது.

அதிகளவானவர்கள் தவறணைக்குள் உள்ளேயிருந்து கள்ளுக்குடித்தமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தவறணைகள் சீல் வைக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ் நகரில் பல உணவகங்கள் உள்ளேயிருந்து உணவு உட்கொள்வதை நிறுத்தியுள்ளன.

உணவை பொதி செய்து மட்டும் வழங்கி வருகின்றன. ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், உணவங்களிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து, உணவகங்களின் உள்ளேயிருந்து உணவருந்துவதை தாமாக நிறுத்திக் கொண்டுள்ளன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *