யாழ். ஹார்கில்ஸ் திரையரங்கு பணியாளர்கள் 7 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு கோவிட்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்குக் கோவிட் – 19 வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றுபவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 309 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 10 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்குப் பணியாளர்கள்.

அந்தத் திரையரங்கில் பணியாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்குத் தொற்றுள்ளமையை அடுத்து திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 7 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், ஒருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர். யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றொருவர் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் மாணவன். இவர் காத்தான்குடியிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 451 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஏனைய இருவர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் குழந்தையைப் பிரசவித்த தாயார் ஆவார்” – என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *