ஜெய்சங்கர், டக்ளஸ் சந்திப்பு! கடற்றொழிலாளர் பிரச்சினை, மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விகார அமைச்சருக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று(06.01.2021 நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய, இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடலின்போது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தேசிய நல்லிணக்கத்தின் ஊடான உறவுப் பாலத்தினை வலுப்படுத்துவதையும், இந்தியாவுடன் விசேடமாகத் தமிழ் நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கடற்றெரிழில் அமைச்சை எனக்கு வழங்கி இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது .

மேலும் கடந்த காலங்களில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டு புதிய மீன்பிடி தொடர்பான சட்டம் இலங்கையில் அமுல்ப்படுத்தப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளவற்றை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான உதவிகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் குறித்த கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எல்லை தாண்டி வந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரோலர் முறை எனப்படும் இழுவை வலை படகுத் தொழிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தமைக்கு, இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள குறித்த தொழில் முறையினால் இரண்டு நாடுகளின் கடல் வளத்திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களைக் கேட்டுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் குறித்த விடயம் தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமுகமான தீர்வினை காண்பதற்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அரபிக் கடலுக்குச் செல்லுகின்ற இலங்கையின் ஆழ்கடல் பல நாள் கடற்றொழிலாளர்களுக்கான குறுகிய தூரத்தினை கொண்ட மாற்று வழியாக இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான இந்தியக் கடற்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையையும் சாதகமாகப் பரிசீலிப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *