விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் புலம்புவதை நிறுத்த வேண்டும்! தமிழருக்கெனத் தனி அதிகாரம் இல்லை:சரத் வீரசேகர

விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என புலம்பித்திரிகின்றனர். இந்த புலம்பலை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரங்கள் பொதுவானவை. அவை அனைத்தும் மத்திய அரசின் கீழேயே இருக்க வேண்டும்.அவற்றை ஒவ்வொரு மாகாணங்களுக்கென அல்லது தமிழ் மக்களுக்கென அல்லது முஸ்லிம் மக்களுக்கென பிரித்து வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபை முறைமை தேவையற்றது எனக்கூறி வரும் அமைச்சர் சரத் வீரசேகர,அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகாரப்பகிர்வையும் கொடுத்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒரே நாடு ,ஒரே சட்டம் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை. இதை மீறி 9 மாகாணங்களில் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின் ஜனாதிபதியின் கொள்கை பொய்யாகிவிடும்.

எனவே, மாகாண சபை முறைமை தேவையில்லை.மாகாண சபை முறைமையை இரத்துச்செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் அன்றிலிருந்து இன்று வரை உறுதியாக இருக்கின்றேன்.

அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போது அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்து வெளியிட்டு வருகின்றேன்.

இதை உணராமல் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வேண்டும் என புலம்பித்திரிகின்றனர். இந்த புலம்பலை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *