வடக்கில் விதிமுறைகளை மீறி இடம்பெறும் ஒன்றுகூடல்கள்- களியாட்டங்கள்; பலரும் விசனம்

நாட்டில் கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை மீறி வடக்கின் பல இடங்களிலும் சுகாதாரத்துறையினர் வருட இறுதி ஒன்றுகூடல்கள், களியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றதாக விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறையினர், தமக்கு விதிமுறைகள் எவையும் பொருந்தாது என்ற பாணியில் களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுகாதாரத்துறையினரின் வருட இறுதி களியாட்டம், விருந்து இடம்பெற்றது.

அதேபோல வவுனியா, ஓவியா விடுதியில் நேற்றிரவு சுகாதாரத்துறையினர் ஒன்றுகூட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நலன்புரி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் வருட இறுதி ஒன்றுகூடல், கடந்த 20ஆம் திகதி சிலாவத்தையில் இடம்பெற்றது.

மாவட்ட வைத்தியசாலையின் சுகாதாத்துறையினர், கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் என 100 இற்க்கும் அதிகமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதேபோல, மன்னார் மாவட்டத்திலும் வருட இறுதி ஒன்றுகூடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா அபாயத்தையடுத்து, வருட இறுதி ஒன்றுகூடல்களை நடத்த வேண்டாம், பண்டிகைகளில் மக்கள் கூட வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்தல் விடுத்திருந்தார்.

எனினும், தமது அறிவிப்பை தாமே கணக்கிலெடுக்காமல் சுகாதாரத்துறையினர் வருட இறுதி ஒன்றுகூடல்களில் ஈடுபடுவது, வடக்கில் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

சுகாதார காரணங்களை குறிப்பிட்டு, நாளாந்த உழைப்பாளிகளை தனிமைப்படுத்தும் சுகாதாரத்துறையினர், தாமே விதிமீறி ஈடுபடும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *