ஜனாதிபதி மைத்திரி இனவாதி கிடையாது! வடக்கு ஆளுநர்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதி கிடையாது. ஆகையினாலேயே அவருடன் இணைந்து பயணிக்கின்றேன்.” என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இரத்தமும், கண்ணீரும் ஓடிய மண்ணிலிருந்துதான் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். மீண்டுமொரு முறை அவ்வாறானதொருநிலை இங்கு ஏற்படக்கூடாது. இதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும்.

இந்த ஆட்சிமாறி, அடுத்த ஆட்சிவந்துவிட்டால் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என யாராவது கருதுவீர்களானால் அது தவறான எண்ணமாகவே இருக்கும். காரணம் ‘ஜனநாயகம்’ என்ற ஒன்றே அனைத்துக்கும் தீர்வாக அமையும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட நான் முன்வந்தபோது, என்மீது சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மைத்திரிபால சிறிசேன இனவாதி எனவும் கூறினர்.

ஆனால், தான் இனவாதி அல்லன் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். இதை ஆய்வொன்றின்மூலம்கூட என்னால் உறுதிப்படுத்த முடியும். எனவேதான், அவருடன் இணைந்து செயற்படுகின்றேன்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *