மூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்.. கடவுள் காப்பாற்றினாரா.? இல்ல கவுத்திட்டாரா.?

ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

இந்தப்படத்தில் நயன்தாரா அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி ஹீரோவாகவும் ஊர்வசி, மௌலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிரிஸ் இசையமைத்துள்ளார். வில்லனாக அஜய் கோஸ் நடித்துள்ளார்.

அதாவது ஆன்மிகத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் கார்ப்பரேட் சாமியார்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட ஆசைப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம். ஆனால் அந்த விஷயத்தை முழுமையாக சொல்லாமலே போய்விட்டார் ஆர்ஜே பாலாஜி.

ஏனெனில் மூன்றே காட்சிகளில் விளக்க வேண்டிய காட்சியை பத்து தனித்தனி காட்சிகளாக எடுத்து படத்தையே ஜவ்வாக இழுத்து இருக்கிறார்.

மேலும் ஆர்ஜே பாலாஜி இருப்பதால் காட்சிகள் எல்லாவற்றிலும் நகைச்சுவை இருக்க வேண்டும் என்று நினைத்து வலுக்கட்டாயமாக பல காமெடிகளை திணித்து இருப்பதால், சீரியஸாக அணுக வேண்டிய காட்சி கூட காமெடிதான் தருகிறது.

அதாவது ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 3 தங்கைகளுக்கு அண்ணனான ஆர்ஜே பாலாஜிக்கு, மூக்குத்தி அம்மன் என்கின்ற குலதெய்வம் காட்சி தருகிறார். அதேபோல் நாகர்கோவிலில் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திருடி அங்கே ஆசிரமம் அமைக்க ஒரு சாமியார் விரும்புகிறார். பாலாஜியின் உதவியோடு அம்மன் அந்த சதித்திட்டத்தை முறியடிப்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

இந்தப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, தமிழகத்தில் கோயம்பத்தூரில் வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா ஆஸ்ரம கதையை பிரதிபலித்து எடுத்திருக்கிறார். ஏனெனில் அந்த ஆசிரமம் கட்டும் போதும் பல வன உயிரினங்கள் நெருப்புக்கு இறை ஆயின.

அதேபோல் சில சமயங்களில் நித்யானந்தாவை ஸ்பூப் செய்ய நினைத்து அதில் தோற்றுப் போயிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. மேலும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் அம்மன், பத்து நிமிடம் மட்டும் காட்சி கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து உள்ளார்.

மேலும் ஒரு படம் சுவாரசியமாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது வில்லன்தான். இந்தப் படத்தில் வில்லனான அஜய் கோஸ் பகவதி பாபா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரை எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஒரு வில்லன் ஃபீலிங் வரவில்லை என்கின்றனர் மக்கள்.

இறுதியாக ‘எல்கேஜி’ படத்தில் நகைச்சுவையோடு கூடிய ஆச்சரியம் தந்த பாலாஜி ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றி இருக்கிறார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *