வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் வெளிமாகாணங்களில் இறந்தால் சடலத்தை என்ன செய்ய வேண்டும்? கொரோனா நடைமுறைகள் இதோ!!

வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச்சடங்கை நடாத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்படவேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

குறித்த அனுமதியை வழங்குவதற்காக இறந்தவரின் விபரங்கள், இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலை அல்லது இடம் போன்ற விபரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலையைத் தொடர்புகொண்டு கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே அனுமதி வழங்கப்படும் என ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது அவ்வாறு இறப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டால் மிக இறுக்கமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இறுதிச் சடங்கு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உடல் மின்சார தகன இயந்திரத்திலேயே எரியூட்டப்பட வேண்டும் எனவும், உடலம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஆகக் கூடியது 3 மணித்தியாலம் மட்டுமே வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ள ஆ.கேதீஸ்வரன் குடும்பத்தினர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்குபற்றலாம் எனவும், அவர்கள் அனைவரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஒருவரின் உடலம் முன் அனுமதிபெறப்படாது கொழும்பிலிருந்து பாதி வழியில் வரும்போதே சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், இதனால் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களும், குடும்பத்தினரும் பாரிய சிரமங்களுக்கும், அசௌகரியத்திற்கும் உள்ளாகியுள்ளனர் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வேறுமாகாணத்தில் இறப்பு ஏற்பட்டு வடக்கு மாகாணத்தில் இறுதிச்சடங்கு நடாத்த விரும்பினால் முன்கூட்டியே சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதிபெற்ற பின் உடலத்தை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுமக்களை ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாப்பதுடன் ஏற்படும் நேரவிரயத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *