யாழ். மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்: வெளிமாவட்ட பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்!

கொரோனா தொற்று பரவும் அபாயம் தொடர்வதால் யாழ். மாவட்ட மக்கள் அநாவசியமாக வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பதனை தவிர்க்குமாறு யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையின் ஏனைய இடங்களில் காணப்படுவதனைப் போன்று யாழ் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாய நிலை தொடர்ந்து காணப்பட்டு வருவதாக யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய யாழ் மாவட்ட கொரோணா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோணா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. இருந்தபோதிலும் எந்தநேரமும் தொற்று எந்த வழியிலும் ஏற்படலாம் என்ற அச்ச நிலைமை காணப்படுகின்றது.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதாரப் பகுதியினர் தொடர்ச்சியாக விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பரிசோதனைகளையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

தற்போதைய கொரோணா நிலைமையில் யாழ் மாவட்ட மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அநாவசிய மற்ற தேவையற்ற பயணங்களை பெரும்பாலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அத்துடன் ஒன்றுகூடல்கள் விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்துவதனை தவிர்த்தல் வேண்டும் அரச திணைக்களங்கள் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை பேணுதல் மிக முக்கியமானது.

தற்போது அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அதற்குரிய விளம்பரங்களை காட்சிப்படுத்தி வைப்பது அவசியமானது

பொதுமக்கள் கூடுமானவரை அரச அலுவலகங்களுக்குச் செல்லாது தொலைபேசி வழியாகவோ அல்லது இணையமூலமோ தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் நல்லது. தேவையேற்படின் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் தங்களுடைய சேவைகளை நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அவசியமான தேவைகளிற்கு மட்டும் செல்லுங்கள் அப்படி செல்பவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும்.

அத்துடன் பயணிக்கும் வாகனம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோர், எங்கெங்கு செல்கிறீர்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்து வைத்திருத்தல் வேண்டும்.

அநாவசியமான வெளிமாவட்ட பயணங்களை தவிர்த்தல் இந்த காலகட்டத்தில் மிகவும் சிறப்பானதாக அமையும் அத்தோடு அபாயகரமான மாவட்டங்களுக்கு செல்வதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *