கிழக்கு கடற்பரப்பில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்! பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு

இந்தியக் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் வெளியான அறிவிப்பு (2ஆம் இணைப்பு)
எம்.டி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் இன்றிரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படைப் பிரிவு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.டி. நியூ டயமண்ட்’ என்ற கப்பலில் நேற்றுக் காலை தீப்பரவல் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட பாரிய தீயணைப்பு முயற்சிகளுக்குப் பின்னர் இன்றிரவு எம்.டி. நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என இலங்கை விமானப்படைப் பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படை பிரிவு இன்றிரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று இன்று காலை தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தீக்காயங்களுடன் நேற்று மீட்கப்பட்ட மாலுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஏனைய 21 பணியாளர்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.

1ஆம் இணைப்பு

விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

24 மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலையீட்டுடனும் சம்பவ முகாமைத்துவ குழு, கடல்வள பாதுகாப்பு மற்றும் கடல் வள முகாமைத்துவ திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகார சபை, சுற்றாடல் அதிகாரசபை, கடற்றொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஒன்றிணைந்து விபத்திற்குள்ளான கப்பலின் தீயை கட்டுப்படுத்துவதற்கும், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளிலும் மேற்பார்வை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளன.

குவைத் மீனா அல் அஹமதியா துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா பிராந்தியத்தின் பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பனாமா இராஜ்ஜியத்திற்கு சொந்தமான MT – New Diamond எண்ணெய் கப்பலில் இலங்கைக்கு 38 கடல் மைல் தொலைவிலுள்ள சங்கமன்கண்டியை அண்மித்த பகுதியில் வைத்து, 2020 செப்டம்பர் மாதம் 3ம் திகதி முற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த கப்பலில் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *