முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம் ;வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு

பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், நானாட்டான் பிரதேசசபை தவிசாளர், கல்வி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

வட மாகாணம் ஒரு காலகட்டத்திலே கல்வியில் தலை நிமிர்ந்து நின்றதொரு மாகாணமாகும். இந்த நாட்டிலுள்ள அனைவருமே கல்வியென்று சொன்னால் யாழ்ப்பாணமும் வட மாகாணமும் என்று சொல்லுமளவிற்கு இருந்தது. மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து கல்வி கற்பதை பாக்கியமாக கருதினார்கள். அந்நிலை மாறி இன்று க.பொ.த. சாதாரணப் பரீட்சைப் பெறுபேற்றில் 9ஆவது இடத்தில் வட மாகாணம் இருக்கின்றது.

வளப்பகிர்வைச் சரியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதில் வட மாகாண சபை மிக ஆழமாகச் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகத்தான் புதிய கட்டடங்களை வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்கள். இந்த வசதி வாய்ப்புக்கள் மட்டும் கல்வியை உயர்திவிடாது. உங்களின் தேவைகள் அனைத்தும் தேவைகளின் அடிப்படையிலும் முன்னுரிமையின் அடிப்படையிலும் பூர்த்தி செய்யப்படும்.

பிரதமரின் வேண்டுதலின் பேரில் நமது தேவைகளை முன்னிலைப்படுத்திய கோரிக்கையை நான் அவரிடம் கையளித்துள்ளேன். அதேநேரத்தில், கல்வி சமூகம் மாணவர்கள் நூறுசதவீதம் பாடசாலைக்கு வருவதையும், க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றி அவற்றில் சித்தியடைவதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களே, நீங்கள் அரச உத்தியோகத்தை தேடிச் சென்றாலும், தனியார் வேலையைத் தேடிச்சென்றாலும், சுய தொழில் செய்தாலும், வேலைக்காக வெளி நாடுகளுக்குச் சென்றாலும் உங்களுடைய கல்வித் தகைமையென்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கல்வி அறிவுள்ளவர்களாகவும் கல்வித் தகைமையைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

எமது நாட்டில் நீங்கள் பெற்ற கல்வித் தகைமை எந்நாட்டிலும் மதிக்கக்கூடியதாகவிருக்கும். ஆகவே, அந்தக் கல்வித் தகைமையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இழந்த ஒன்றை மீண்டும் பெற முடியாது. உங்கள் மாணவப் பருவத்தில் அதனுடைய பெறுமதி உங்களுக்கு விளங்காமலிருக்கலாம்.

ஆனால், மாணவப்பருவம் கடந்த பின்னர் நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதாலோ, வேதனைப்படுவதாலோ எந்தப் பயனுமில்லை. எந்த நேரத்தில் எதை நீங்கள் பெறவேண்டுமோ அதை நீங்கள் பெற்றுக்கொள்ளவதற்காக கல்வி சமூகம் உங்களுடன் பக்க பலமாக இருக்கின்றது. பருவ வயதில் படிப்பு என்பது கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.

அதை உணர்ந்து கொண்டு சிறப்பாகப் கற்க வேண்டும். தற்போது அரசாங்கம் பல்கலைக்கல்விக்காக இன்னுமொரு செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. ‘சித்தி பல்கலைக்கழகம்’ என்ற ஒன்று உருவாக்கப்படப்போகிறது. இதுவரை வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் முறை இருக்கிறது.

அதாவது 20 சதவீதமான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த ‘சித்தி பல்கலைக்கழகத்தில்’ நீங்களாகவே விரும்பிய துறைகளில் விண்ணப்பித்து இணைந்து கொள்ள முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் இல்லாமல் நாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாலும் அதனால் பயனடையப்போவது நமது மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கப்போவதில்லை. ஆகவே மாணவர்கள் கல்வித்தகமையை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கான வளங்களைத் தருவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *