இந்தியாவிலிருந்து யாழிற்கு சட்டவிரோதமாக குடியமர வந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில்

இந்தியாவிலிருந்து கடல்வழியாக சட்டத்துக்கு புறம்பாக படகில் வந்து யாழில் குடியமர முற்பட்ட இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கடுமையான சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்பு கடற்படைப்பிரிவு நேற்று காலை மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது தொண்டமனாறிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதியில் டிங்கிப் படக்கு ஒன்றில் பயணித்த போதே அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர முயன்றது தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் 21 முதல் 52 வயதுக்கு உள்பட்டவர்கள்.

மற்றைய இருவரும் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் முன்னாள் போராளி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவாச பிரச்சினை மற்றும் நெஞ்சு வலி காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வந்த இருவரில் ஒருவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

மற்றைய மூன்று பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சுகாதார நடைமுறைகளின் படி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *