மீண்டும் திறக்கப்படுகிறது காரைநகர் கசூரினாச் சுற்றுலா மையம்!

காரைநகர் – கசூரினா கடற்கரைச் சுற்றுலா மையம் ஜூலை-01 ஆம் திகதி புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ் தெரிவித்தார்.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு அதிகாரிகள், வடக்கு சுற்றுலா நிபுணர்கள் மற்றும் உள்ளூராட்சி திணைக்கள பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடியதற்கமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உரிய சுகாதார நடைமுறைகளைப் பேணி, சமூக இடைவெளிகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள்.

உரிய சுகாதார நியமங்களை பேணுவதற்கான அறிவுறுத்தல்களை சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய நிபுணர் எஸ்.யோகராஜன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டப்பணிப்பாளர் சி.சிவபாலன், உள்ளூராட்சி திணைக்கள பிரதிநிதி இ.கிருஸ்ணகுமார் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டதற்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதி முதல் காரைநகர் கசூரினா சுற்றுலா மையம் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி சகல வசதிகளுடன் மீள திறக்கப்படும் என காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

நாடு தழுவிய ரீதியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கசூரினா சுற்றுலா மையத்தில் உள்ள மணற்தரையான கடற்கரை, சிறுவர் பூங்கா, நவீன வசதி கொண்ட பொதுநோக்கு மண்டபம், நவீன குளியலறை, நவீன ஐங்கோண பல் சுவைகொண்ட சுற்றுலா உணவகம் (சைவ, அசைவ, பாரம்பரிய) பாரம்பரிய வர்த்தக கடைத் தொகுதிகள், இளைப்பாறு குடிகள் மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் சுற்றுலா மையம் முழுமையாக செயற்படவுள்ளது.

பல்வேறு தடைகளால் இதுவரை காரைநகர் பிரதேச சபையின் முக்கிய வள வருமான மூலாதாரம் தடைப்பட்டிருந்தது. எம்மால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் பிரகாரமும், மத்திய, மாகாண அரசின் உயர் மட்ட மற்றும் ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு இணங்க மீண்டும் கசூரினா சுற்றுலா மையம் புதுப் பொலிவுடன் சுற்றுலா பயணிகளுக்கு கைகொடுத்து உதவும் எனவும் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ் கூறினார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *