யாழ் மாநகரசபை அதிகாரத்தரப்பால் கொல்லப்பட்ட தீயணைப்பு வீரர்!!!

யாழ் குடாநாட்டில் ஏற்படும் பாரிய தீவிபத்துக்களை முறியடிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரே ஒரு நவீன தீயணைப்பு வண்டி இன்று சின்னாபின்னமானது. அத்துடன் சகாயராஜா என்ற 34 வயதான குடும்பப் பொறுப்பு மிக்க மாநகரசபை ஊழியர் ஒருவரின் பெறுமதி மிக்க உயிரும் பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் யோகேஸ்வரி பற்குணராஜா மாநகரசபை முதல்வராக இருக்கும் போது பல மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த தீயணைப்பு வாகனம் யாழ் மாநகரசபைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதற்காக பல தீயணைப்பு ஊழியர்களும் அவரது ஆட்சிக் காலத்திலேயே சேர்க்கப்பட்டார்கள். சேர்க்கப்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் தீயணைப்பு சேவைகளை மேற்கொண்டு வந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் தற்போது குறித்த வாகனம் தரித்து நிற்பதற்கும் தீயணைப்பு சேவைகளை விரிவாக மேற்கொள்வதற்கும் கடந்த வருட முற்பகுதியில் தீயணைப்பு சேவைக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டது. குறித்த தீயணைப்பு ஊழியர்களில் ஒரு சிலர் மிகவும் துர்நடத்தை உடையவர்கள் எனவும் புதிதாக திறக்கப்பட்ட அந்த கட்டடத்தில் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் துர்நடத்தையுடைய பெண்களின் நடமாட்டங்கள் சில நேரங்களில் காணப்படுவதாகவும் மது விருந்து அங்கு நடப்பதாகவும் தனக்கு முறைப்பாடு கிடைத்தது யாழ் மாநகரசபைக்யின் உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் தரப்புக்கு தெரியப்படுத்தியிருந்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் ஊடகவியலாளர் ஒருவருக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன் அலுவலகத்துக்கு முன்னால் நடந்த விபத்து ஒன்றில் காயப்பட்ட ஒரு பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீயணைப்புச் சேவைக்குரிய அம்புலன்சை அழைத்த போது அங்கு அந்த அம்புலன்ஸ் சாரதியைக் காணாமல் தேடியதாகவும் பின்னர் அந்தப் பெண்ணை ஆட்டோ ஒன்றில் தாங்களே ஏற்றி அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறன நிலையில் இன்று நடந்த விபத்தும் அதி வேகமாக சென்றதன் காரணத்தாலேயே நடந்துள்ளதாக பொதுமக்களின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. குறித்த வாகனம் பலமுறை குத்துக்கரணம் அடித்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடந்த ஒரு தீச் சம்பவம் ஒன்றுக்குச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறான தீ விபத்து ஏற்பட்டதா?? அத்தீ விபத்தின் தன்மை பாரதூமானதா? என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது. அத்துடன் குறித்த தீயணைப்பு வாகனத்துடன் இன்னொரு பிக்கப் வாகனமும் தீயணைப்புக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கையளிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த வாகனத்தை வேறு தேவைகளுக்கு மாநகரசபை அதிகாரிகள் பாவிப்பதாகவும் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டுகின்றார்.

குறித்த தீயணைப்பு வாகனத்தை ஏற்கனவே அதிகாரத்தில் உள்ளவர்கள் துஸ்பிரயோகமாகப் பாவித்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்னர் குறித்த தீயணைப்பு வாகனம் குறும்படம் எடுப்பதற்கா செம்மணிப் பகுதிக்கு சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சில வருடங்களுக்கு முன் தேன் கூடு ஒன்றில் தேன் எடுப்பதற்கும் குளவிகளைக் கலைப்பதற்கும் ஒரு அதிகாரி குறித்த வாகனத்தை சுன்னாகம் வரை கொண்டு சென்றார் என்பதும் வரலாறாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இன்று நடந்த இந்த விபத்துத் தொடர்பாக உயர் அதிகாரிகள் தரப்பு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அநியாயமாக ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்கு அதிகாரத்தரப்பின் அசன்டையீனம் இருந்துள்ளது.

மாநகரசபையின் அதிகாரத்தரப்புக்கள் தொடர்பாக பொதுமக்களும் மாநகரசபைக்குள்ளே வேலை செய்யும் அலுவலர்களும் தொடர்ச்சியான விசனங்களை பல்வேறுபட்ட தரப்புக்களிடத்திலும் கூறி வருகின்றார்கள். குறிப்பாக மாநகரசபையின் அதிகாரத்தரப்புக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர்கள் இரகசியமான முறையில் கொடுக்கும் தகவல்கள் ஆதாரங்கள் இல்லாத காரணங்களால் பிரசுரிக்கப்படுவதில்லை.

தங்கள் வீட்டு குப்பையை மாநகரசபை வண்டியில் ஏற்றுவதற்கு மாநகரசபை சுகாதார ஊழியர்களுக்கு பொறுப்பான அதிகாரியே பணப் பேரம் பேசி லஞ்சம் பெற்று குப்பைகளை ஏற்றுகின்றார் என பொதுமக்கள் தரப்புக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தாலும் தமது பெயர், முகவரிகளையும் அவ்வாறு பணம் பெற்ற வேலை மேற்பார்வையாளர் யார் என்பதைக் கூட ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றார்கள் இல்லை. தம்மை அடையாளப்படுத்தினால் தங்களுக்கு ஏதாவது சிக்கல் கு்றித்த மாநகரசபைத் தரப்பினார் ஏற்படும் என அச்சப்படுகின்றார்கள்.

மாநகரசபை அதிகாரத்தரப்புக்கள் தொடர்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் ஊடகவியலாளருக்கு விசனத்துடன் தெரிவித்த கருத்துக்கள் அப்படியே இங்கு தரப்பட்டுப்ள்ளன. தாங்கள் இருதலைக் கொள்ளி எறும்புபோல மாநகரசபையில் பணியாற்றுவதாகவும் யாழ் மாநகரசபை ஆணையாளருக்கும் யாழ் மாநகரசபை முதல்வருக்கும் இடையில் பனிப்போர் நிகழ்ந்து வருவதால் யாராவது ஒருவர் சொல்லும் கட்டளையை தாங்கள் மேற்கொள்ள முற்பட்டால் மற்றவர் அதனைத் தடுத்து நிறுத்த முற்படுவதாகவும் அந்தக் கட்டளையை தாங்கள் செயற்படுத்த முற்பட்டால் தாம் பழிவாங்கலுக்கு உட்படுவதாகவும் அவர் தெரிவித்தார். யாழ் மாநகரசபை ஆணையாளர் சிறப்பான முறையில் கவிதை எழுதும் தனக்குள்ள ஆற்றலைப் போல் மாநகரசபை நிர்வாகத்தை செயற்படுத்துவதில் ஆற்றல் குறைவானவர் போல் செயற்படுகின்றார் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. யாழ் மாநகரசபை முதல்வர் , ஆணையாளர் தொடாபாக பலருக்கும் நேரடியாகவே குறைகூறி வருவதாகவும் உறுப்பினர்கள் ஊடாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மாநகரசபையில் பாரிய ஊழல் மோசடிகள் புரியும் ஊழியர்க்ள இருக்கும் போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நிர்வாக ரீதியில் சிறு குற்றம் செய்யும் ஊழியர்களையும் தனது சொல்லுக்கு கட்டுப்படாத சில ஊழியர்களையும் கடுமையாக பழிவாங்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் ஊழியர்கள் தரப்பில் இருந்து அறியமுடிகின்றது..

அத்துடன் மாநகரசபை செயலாளராகவும் பிரதி ஆணையாளராகம் உள்ள அதிகாரி தனது இருப்பிடத்தைச் சூழவும் அழகிய பெண் ஊழியர்களையே பணிக்கு வைத்துள்ளார் எனவும் ஒரே ஒரு அலுவலக சேவகர் மாத்திரமே அங்கு ஆணாக உள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த அதிகாரி யாராவது ஒரு ஊழியர் தன்னை சந்திக்க வரும் போதும் ஊழியர்கள் யாரையாவது விசாரணைக்கு உட்படுத்தும் போது கடுமையான முறையில் மரியாதையீனமாக ஏசுவதாகவும் இதனால் அந்த ஊழியர் பெண்களுக்கு முன் தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணி மனக்குமுறலுக்கு உள்ளாகுவதாகவும் சில ஊழியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.. குறித்த அதிகாரி அந்த பெண்அலுவலர்கள் முன் தன்னை இவ்வாறு காட்டி கதாநாயகர் என தன்னை உருவகிக்கின்ற மனநிலையுடன் இருப்பது எதற்காக எனவும் குறித்த ஊழியர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான ஒரு நிலையிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன் சாரதி ஒருவர் அதிகாரி மீது தாக்குதல் சம்பவத்தை நடாத்த முற்பட்டு தற்போது வேலையிழந்து நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுவருகின்றார். குறித்த அதிகாரியைச் சூழ உள்ள பெண் அலுவலர்களுக்கு முன் சாரதியைக் கேவலப்படுத்தியதாலேயே சாரதி தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் ஏனைய சாரதிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை இன்னொரு சாரதியும் இவ்வாறு பெண் அதிகாரி ஒருவரையும் பொறியியலாளரையும் தரக்குறைவாகப் பேசியும் சாரதி மீது பெரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த சாரதி சொந்தமாக பல வாகனங்களை வைத்துள்ளார் எனவும் ஆனால் மாநகரசபையில் வாகனங்கள் ஓடுவதற்கு தன்னால் இயலாது எனவும் கூறியுள்ளார். உடனடியாக அந்த சாரதியை தனக்கு நெருக்கமான பகுதி ஒன்றுக்கு அலுவலக உதவியாளராக அதிகாரி நியமித்துள்ளாதாகவும் தற்போது அந்தப் பகுதியில் அந்தச் சாரதி எந்தவித வேலையும் செய்யாது அங்கு சென்றுவரும் ஊழியர்களை ஏளனமாக கதைத்து வருவதாகவும் சினிமாப் பாணியில் பஞ்சு வசனங்களைப் பறக்கவிடுவதாகவும் சாரதிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த அதிகாரியைத் தாக்க முற்பட்ட சாரதியும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டதால் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் அந்த சாரதியை வேலையில் இருந்து நிறுத்திவிட்டு தனக்கு சார்பான சாரதியை முழங்காலில் தேய்வு என கூறி அலுவலக உதவியாளராக மாற்றியுள்ளதாகவும் சாரதிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே வேளை குறித்த மாநரசபையில் நடைபெறும் மிகப் பெரும் ஊழல்கள் தொடர்பாக ஆளுநர் மற்றும் ஜெனாதிபதி தரப்புக்கு தெரியப்படுத்துவதற்கு சில தரப்புக்கள் முயன்று வருவதாகவும் அறிய முடிகின்றது.. மாநகரசபையின் அதிகாரத்தரப்புக்களின் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியிடப்படும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *