உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி – எழிலேந்தினி

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்.

15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜுலை மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெறவுள்ளது.

இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்ரேலியா, வட அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக களமிறங்கவுள்ளார்.

கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் 3 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி, இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இதேவேளை, அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலர் முதற்தடவையாக உலகக் கிண்ண இலங்கை வலைப்பந்தாட்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த வருடம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற நான்கு அணிகள் பங்குகொண்ட நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணிக்ககாக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட எழிலேந்தினி, அதன்பிறகு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும், அண்மையில் நிறைவுக்கு வந்த கென்யா, மலேஷியா மற்றும் இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்ட நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்தாட்டத் தொடரிலும் விளையாடியிருந்தார்.

அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண இலங்கை வலைப்பந்தாட்ட அணி:

சதுரங்கனி ஜயசூரிய (அணித்தலைவி), கயனி திஸாநாயக்க (உப தலைவி), தர்ஜினி சிவலிங்கம், ஹசிதா மெண்டிஸ், எழிலோந்தினி சேதுகாவலர், கயங்ஞலி அமரவங்ச, நவுஜலீ ராஜபக்ஷ, துலங்கா தனஞ்சலி, துலங்கி வன்னிதிலக்க, திலினி வத்தேகெதர, தர்ஷிகா அபேவிக்ரம, தீபிகா ப்ரியதர்ஷனி அபேகோன்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *