யாழ் சர்வதேசவிமான நிலையத்திலிருந்து சென்னை செல்வோரிற்கு மகிழ்ச்சியான தகவல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை, வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரி அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 3 மாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அதனால் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலைகள் தொடர்பில் அலைன்ஸ் எயார் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில் 3 நாள்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நாள்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க, மத்தள) பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது.

எனினும் கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும். எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *