பகிடிவதை குற்றச்சாட்டுக்கள்… வாக்குமூலமளிக்க பின்வாங்கும் மாணவிகள்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாணவிகள் முன்வந்து வாக்குமூலமளிக்க பின்னடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் முறைப்பாடுகளை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் எம்.சாள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு முறைப்பாடுகளை வழங்கினால் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ராக்கிங் என்ற போர்வையில் இடம்பெற்ற பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆயினும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் எமக்கு முறைப்பாடு தெரிவிக்கவில்லை. அவ்வாறு மாணவர்கள் முறைப்பாட்டை தெரிவிக்குமிடத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவே இருக்கிறோம்.

ஆகையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று கோருகின்றோம்.

இதே வேளை இவ்வாறு நேரடியாக முறைப்பாடுகள் எவையும் எமக்கு கிடைக்காமல் விட்டாலும் இது சம்மந்தமான முறைப்பாடுகள் வேறு தரப்பினர்கள் ஊடாக கிடைக்கப் பெற்றுத் தான் இருக்கின்றன.

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கின்ற போது அது சம்நமந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் விரைவாக எடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று யாழ்.பல்கலைக்கழகம் முன்னதாக மகளிர் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *