ஏ9 வீதியை மறித்து சிங்கள மக்கள் போராட்டம்!

வவுனியா மடுக்கந்த தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி அப்பகுதி சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வவுனியா கல்வித்திணைக்களத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது .

இன்று காலை கல்வித்திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் திடீரென ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது பாடசாலைக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமித்தல் மட்டுமே அங்கிருந்து செல்வோம் எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதனால் ஏ9 வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து பொலிஸார் மாற்று வழிகளினூடாக போக்குவரத்தை சீர்செய்திருந்ததுடன், வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணனை ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைத்து வந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது தமது பாடசாலையில் 750 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்பதாகவும் உயர்தரத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில் அவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதோடு ஏனைய வகுப்புகளுக்கும் மாணவர்களை நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் இரண்டு வாரத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஆவன செய்வதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தபோது, அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

எனினும் எழுத்து மூலமாக தமக்கு உறுதிப்பாடு தரவேண்டும் என கேட்டதற்கு அமைய வலயக்கல்விப்பணிப்பாளரினால் எழுத்து மூலமாக உறுதிமொழி வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *