கட்டளையிட்ட கருணா மற்றும் பிள்ளையான் வெளியில்! கட்டளையை செயற்படுத்தியவர்கள் சிறையில் – ஆனந்தசங்கரி

விடுதலைப் புலிகளின் தளபதிகளின் ஆணையை ஏற்று செயற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மிக நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றார்கள். ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான பிள்ளையான கருணா மற்றும் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் பொது மன்னிப்பு பெற்று சுதந்திரமாக திரிகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாரோ ஒருவரின் கட்டளைக்கமைய செயற்பட்டவர்கள் சிறையில் வாடுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதுடன் நமது நாட்டில் பொது மன்னிப்பு புதிதான விடயமுமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்றையதினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

பிரதமரே நான் தற்போது கடிதம் எழுதக்கூடிய பொருத்தமான தருணம் இது என்று நினைக்கிறேன். காரணம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான பிரேரணைக்கு ஏன் முகம்கொடுக்க நேர்ந்தது என்பதை நாம் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நேரத்தில் யுத்த களத்தில் யார்? யார்? எப்படி? நடந்து கொண்டார்கள் என்று சரி பிழைகளை ஆய்வு செய்வதற்கு அப்பால், யுத்தத்தை மேற்கொண்ட இரண்டு தரப்பினராலும் விரும்பத்தகாத அடிப்படை மனித உரிமை மீறல்கள் அதிகமாகவே நடந்துள்ளன என, நாம் அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அந்த நேரத்தில் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஒரு ஜனாதிபதியாக இருந்தீர்கள். ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று 02.05.2009ம் திகதி பல்வேறு ஆலோசனைகளுடன், அரசுக்கு ஏற்புடைய ஒரு சர்வதேச அமைப்பை தெரிவு செய்து, விடுதலைப் புலிகளுடன் ஆலோசித்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு கேட்டிருந்தேன்.

அவ்வாறு செய்திருந்தால் நமது நாடு இன்று ஜெனிவா மாநாட்டிற்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. விடுதலைப் புலிகள் ஒரு கொரில்லா தாக்குதலை உள்ளடக்கிய ஒரு போராடும் அமைப்பு. அவர்களிடம் சர்வதேச யுத்த மரபுகளுடன் தான் போராட வேண்டும் என்று, நாம் எதிர்பார்க்க முடியாது.

இது உலகிலுள்ள சகல போராட்ட அமைப்புகளுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு ஜனநாயக நாடு சர்வதேச யுத்த மரபுகளை மீறி செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டதன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சனையாகும்.

தாங்கள் 2006ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஆற்றிய உரையில் விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு எம்மால் செவிமடுக்க முடியாது, ஆனால் சிறுபான்மை இன மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு குறைந்தபட்சம் ஆனந்தசங்கரி போன்றோரின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியே தீர வேண்டும் என்று, மிக தெளிவாக கூறியிருந்தீர்கள்.

யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தாங்களே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் சுதந்திர தின உரையில் கூறியது போல நடந்து கொள்வீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அந்த கால கட்டத்தில் நான் எதிர்பார்த்தபடி நீங்கள் எதுவும் செய்யவில்லை.

நான் அடிக்கடி இந்திய முறையிலான ஒரு அரசியல் திட்டத்தையே வலியுறுத்தி வந்தேன் என்பது நீங்கள் அறியாததல்ல. அதை நிறைவேற்றுவீர்கள் என நான் பெரிதும் எதிர்பார்த்தேன். மீண்டும் காலச்சக்கரம் மாறி, தாங்கள் பிரதம மந்திரியாகவும் தங்கள் சகோதரர் ஜனாதிபதியாகவும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கியவாறு மிகவும் பலம் பொருந்திய ஒரு மனிதராக திகழ்கின்றீர்கள்.

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நினைத்தால் ஒரே நாளில் எமது மக்கள் எதிர்நோக்குகின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வை காணலாம். இலங்கை சுதந்திரம் அடைந்ததின் பின் அமைக்கப்பட்ட முதல் அரசாங்கத்தில், அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தமிழ் அரசியல் தலைமைகளிடம், சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் வராதவாறு பாதுகாப்போம் என்ற வாக்குறுதியையும் கொடுத்திருந்தார்.

அந்த நேரத்தில் தங்கள் தந்தையாரும் அவ்வரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஆகவே அந்த பொறுப்பில் தங்களுக்கும் பங்கு உண்டென்பதை நான் உணர்கின்றேன். எனவே தேசபிதா என்று போற்றப்படும் டி.எஸ்.சேனநாயக்கா அவர்களின் கூற்றிற்கு ஏற்றவாறு, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மனம் வைத்தால் இது மிகவும் இலகுவானதாக இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன்.

குறிப்பாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை நான் இங்கு குறிப்பிடலாம். விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளின் ஆணையை ஏற்று செயற்பட்டு, பல்வேறு உயிர்ச் சேதங்கள், பொருட் சேதங்களை ஏற்படுத்திய சிறையிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மிக நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் கருணா என்கின்ற வி.முரளிதரன் ஆகியோர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்படுகின்றார்கள்.

இது போன்றே ஜே.வி.பி. கிளர்ச்சி மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்ற காலகட்டங்களில் பொது மன்னிப்பு பெற்று விடுதலையான மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்ட பலரும், ஜனநாயக அரசியலில் கலந்து நாடு முழுவதும் வலம் வருகின்றார்கள்.

இந்த நிலையில் யாரோ ஒருவரின் கட்டளைக்கமைய செயற்பட்டவர்கள் சிறையில் வாடுவது எந்த வகையிலும் நியாயப்படத்த முடியாத செயலாகும். நமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது புதிதான விடயமுமல்ல என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.

நாம் அனைவரும் முந்தி பிந்தி ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே! எமது மிக நெருங்கிய அயல் நாடு மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடும் இந்தியாவே. யுத்தத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பு இல்லாமல், நீங்கள் வென்றிருக்க முடியாது என்பதை, யுத்தம் முடிந்த பின் நீங்கள் ஆற்றிய உரையில் மறைமுகமாக, ராஜீவ் காந்தியின் படுகொலையே விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தீர்கள்.

இந்தியாவில் இருந்து வந்த பௌத்த மதமே பெரும்பான்மை மக்களுடைய மதமாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் அவர்களும் பௌத்த மதத்தை சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் ஏற்கனவே இந்திய அரசியல் அமைப்பு முறை சமந்தமாக பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் வணக்கத்திற்குரிய மதகுருமார்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

எனவே இந்தியாவை ஒத்த ஒரு அரசியல் தீர்வை நாம் ஏற்றுக்கொள்வதற்கு எந்த தடையும் இருக்காது என்பதே எனது எண்ணமாகும். இன்றைய அரசாவது உண்மையான பௌத்த கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாயின், அதன்படி ஆட்சி நடத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். அனைத்து இன மக்கள் மீதும் அன்புடனும், அமைதியுடனும், கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள்.

உண்மையில் பௌத்த தர்மத்தின் ஆட்சியை நீங்கள் நடாத்த வேண்டுமானால், எல்லாவற்றையும் மறந்து, நான் பெரிது நீ பெரிது என்று பாராமல், நம் நாடும் மக்களும் பெரிது என்று எண்ணி ஆட்சி நடத்தினால் நாம் அனைவரும் சமமாகவும், அன்பாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். காழ்ப்புணர்ச்சி கொண்டு எவர் மீதும் வஞ்சம் காட்டாமல், நீதியான நேர்மையான ஒரு ஆட்சியை இனியாவது ஏற்படுத்தி நம் நாட்டு மக்களை சந்தோசமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு.

அப்போது தான் பௌத்த தர்மத்தை ஏற்று அதன்படி ஆட்சி செய்கின்ற ஒரே நாடு என்ற பெருமையும் உங்களை வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *