யாழ். மாநகர சபையின் மேயர் ஆனோல்ட்டா? மணிவண்ணனா? இன்று காலை பலப்பரீட்சை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ள மேயர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இவ்விரு போட்டியாளர்களில் யார் வெல்லப்போகின்றார்கள் என்பது தொடர்பில் இரண்டு தரப்புகளிடையே குழப்பம் நீடிக்கின்றது.

யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடைந்ததால் மேயர் பதவியை ஆனோல்ட் இழந்திருந்தார்.

இந்தநிலையில், இன்று புதிய மேயர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் மீண்டும் மேயர் பதவிக்கு ஆனோல்ட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

கடந்த முறை மேயர் தெரிவு இடம்பெற்றிருந்தபோது ஈ.பி.டி.பியின் காய்நகர்த்தலினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிப்பீடம் ஏறியிருந்தது.

எனினும், நாளை நடைபெறவுள்ள மேயர் தெரிவு தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஊடகவியலாளர்கள் நேற்று தொடர்புகொண்டு யாருக்கு ஆதரவு வழங்கப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “இதுவரை எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்மானிக்கவில்லை. ஒரு தரப்பும் எங்களுடன் பேச்சு நடத்தவும் இல்லை. இறுதி நேரத்திலேயே யாருக்கு ஆதரவு என்று முடிவெடுப்போம்” என்றார்.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணன், தான் முன்னணி சார்பில் மேயர் தெரிவில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் 13 உறுப்பினர்களில் 8 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்.மாநகர சபையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கப்போவதில்லை என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேயர் தெரிவுக்குப் போட்டியாளரை நிறுத்தாது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு நபரைத் தவிர்த்து ஆனோல்ட்டை மீண்டும் மேயராகப் போட்டியிட வைத்தால் எதிர்த்து வாக்களிப்போம் எனவும் ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மேயர் தெரிவு போட்டியியில் இன்று களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள மணிவண்ணனும் தாமும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை என்றும், ஊடகங்கள் ஊடாகவே பொதுவான அழைப்பை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேயர் தெரிவு விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவான சிலர் நாளை மணிவண்ணனை ஆதரிக்கக்கூடிய சூழல் காணப்படுகின்றது எனப் பேசப்படுகின்றது.

இதனிடையே நாளை இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அது ஆனோல்ட்டுக்குப் பாதகமாகவும், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தினால் அது மணிவண்ணனுக்குப் பாதகமாகவும் அமையும் என்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சபை உறுப்பினர்கள் சிலர்.

இதேவேளை, ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு தலைமைகளுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மணிவண்ணனை ஆதரிப்பதை ஈ.பி.டி.பியினர் கைக்கொள்ளக்கூடும் என்கின்றனர் அவதானிகள்.

எனவே, இன்று காலை 9.30 மணிக்கு பரபரப்புக்கு மத்தியில் மாநகர சபை மேயர் தெரிவு இடம்பெறும் என்பது வெளிப்படை.

யாழ்.மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 03 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *