இருவேறு விபத்துக்களில் இரு சிறுவர்கள் பலி

தனியார் பேருந்து மோதி சிறுவன் பலி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவனோடு மோதிய விபத்தில் குறித்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். 

இதனையடுத்து  குறித்த பகுதியில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் பேருந்தின் மீது தாக்குதலை நடத்தியிருந்தனர்.இதனால் விபத்து இடம்பெற்ற பகுதியில் நண்பகல் வரை பதற்றமான சூழல் நிலவியிருந்தது.

மேற்படி விபத்து சம்பவமானது  ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலகாட்டு சந்தியில் அமைந்துள்ள பாடசாலைக்கு அருகாமையில் காலை 9 மணியளவில் இடம் பெற்றிருந்ததுடன் இதில் மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் அகிலன் எனும் 17வயதுடைய மாணவனே உயிரிழ ந்தவராவர். 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் காலை வேளையில் தனியார் பேருந்தொன்று பாலக்காட்டு பகுதியூடாக ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது பேருந்தானது பாலக்காட்டு சந்தியை அண்மித்த வேளை ஒலுவில் வீதியூடாக பிரஸ்தாப மாணவன் துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளான். 

இதன்போது பேருந்தானது துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவனை மோதித் தள்ளி சுமார் 10மீற்றர் தூரம் இழுத்து சென்றுள்ளது. இதில் குறித்த பேருந்தின் சக்கரங்களுக்குள் சிறுவன் அகப்பட்டதன் காரண மாக இச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் மற்றும் குறித்த உயிரிழந்த மாணவனின் உறவினர்கள்  விபத்துக்குள்ளான பேருந்தின் மீது தாக்குதலை நடத்தியிருந்தனர். இத் தாக்குதலின் போது பேருந்தின் சாரதி பேருந்தை அவ்விடத்திலேயே விட்டு விட்டு ஒடிச் சென்று ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து ஊர்காவற்றுறை பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்திருந்தனர்.

அங்கு குறித்த பேருந்தின் மீது அப்பகுதி மக்கள் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர். இதன் போது அவர்களிடமிருந்து பேருந்தை மீட்பதற்கு பொலிஸார் முயற்சித்த வேளை தாக்குதலில் சிக்கி பொலிஸார் ஒருவர் காயமடைந்திருந்தார். 

எனினும் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன் குறித்த பேருந்தையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

மாணவனின் மரணம் தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி மேற்கொண்டிருந்தார். அத்துடன் பொலிஸாரிடம் சரணடைந்த பேருந்தின் சாரதியை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.      


விபத்தில் சிக்குண்ட 7 வயது சிறுவன் பலி 

முல்லைத்தீவு முள்ளிவாய்காலில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

வவுனியா பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக வந்திருந்த சிறுவன் முள்ளிவாய்க்கால் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் முன்னால் வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்னால் பயணித்த கப் ரக வாகனம் சிறுவனை மோதித்தள்ளியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பரனாட்டகல் ஓமந்தை வவுனியாவை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் (வயது 7) என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான்.இந்நிலையில் விபத்து தொடர்பான மேல திக விசாரணையை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.