பிரான்ஸ் செல்லும் நோக்கில் வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

ஆழ் கடலில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், சீருடைகளையும் கொண்டு சேர்க்கும் பணிகளின் பிரதான நபராக செயற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் அருமைநாயகம் பிருசோத்தனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் ட்ரோலர் பிரதானிகளில் ஒருவரான இம்ரான் பாண்டியன் சிறப்பு படையணியில் கடாபியிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படுகின்றது.

இவர் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் நோக்குடன் உரிய ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.

இதன்போது கடந்த 14ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் துலானி அமரசிங்கவின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரை இன்றுவரை (17ஆம் திகதி வரை) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், மன்றுக்கு தமது விருப்பத்தை தெரிவிக்க நீதிவான் அனுமதியளித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் கீழ் பயிற்சி பெற்று, முல்லைத்தீவு, செம்மலை பகுதிகளில் சிறப்பு பயிற்சிகளை முடித்துள்ளார்.

இதையடுத்து ஆழ் கடலில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், சீருடைகளையும் கொண்டு சேர்க்கும் பணிகளின் பிரதான நபராக அருமைநாயகம் பிருசோத்தனன் இருந்துள்ளார்.

இவர் 2007ஆம் ஆண்டு இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு 2013ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் யுவதி ஒருவரை திருமணம் முடித்த குறித்த நபர் பிரான்ஸ் செல்வதற்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு வந்துள்ளார்.

இதன்போதே குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.