முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை!

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் எனத் தெரிவித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றைப்பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று பிற்பகல் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு நேற்று முதல் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கட்டளை

சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் என தெரிவித்து பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106ற்கு இணங்க 14 நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த இடத்திலே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது.

அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி எம்மால் அறிந்து கொள்ள முடியாது.

இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாடு, சமாதானம் மற்றும் அமைதிக்கும் பங்கம் ஏற்படலாம் என சந்தேகித்து முல்லைத்தீவு பொலிசாரால் மேற்கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவிற்கு இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பகுதியில் மட்டுமே நினைவேந்தல் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஏனைய பகுதிகளில் நினைவேந்தல் மேற்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும் பக்கம் ஏற்படாத வாறு நிகழ்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.