குழப்ப வேண்டாம்! சகல கட்சிகளிடமும் சம்பந்தன் வேண்டுகோள்

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில் அப்பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியல் கட்சிகளிடத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும் தரப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

1978ம் ஆண்டு அரசியலமைப்பை கைவிட வேண்டும். அதில் உள்ள பல விடயங்கள் ஏற்புடையனவல்ல. அதனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

அவ்விடயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான இணக்கப்பாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

அத்துடன் நிறைவேற்று அதிகார முறையை நீக்குதல், புதிய தேர்தல் முறை உருவாக்கம் போன்ற விடயங்கள் குறித்தும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை யாரும் குழப்பவோ, தாமதப்படுத்தவோ கூடாது என்றார்.