வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உடல் சிதறி ஸ்தலத்திலேயே பலி

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதால் இன்று ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் இன்று மதியம் வவுனியா, கொக்குவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிள் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளதுடன், அவரின் சடலமும் புகையிரதத்தால் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் விபத்து ஏற்பட இருந்த நிலையில் மோட்டர் சைக்கிளில் இருந்து குதித்தமையால் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளார். இந்த விபத்தில் வவுனியா, பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த 43 வயதான ந.ஜீவன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.