யாழ்.கொட்டடிப் பகுதியில் இளைஞன் மர்மமாக மரணம்

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இளைஞரொருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.ஐந்து சந்தி பச்சபள்ளி பகுதியை சேர்ந்த யாஸீன் அஸ்வத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் அதிகாலை கொட்டடி ஏழாம்  குறுக்கு வீதியில் சடலமொன்று இருப்பதை அப்பகுதி மக்கள் அவதானித்திருந்தனர். குறித்த சடலத்தின் வாயினால் நுரை தள்ளிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக அப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக குறித்த உயிரிழந்த நபர் அடையாளம் காணப் பட்டிருந்தார். இதேவேளை குறித்த சம்பவ மானது திட்டமிட்ட கொலை சம்பவமாகவும் இருக்கலாம் எனவும் அப் பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை குறித்த நபர் மணமல்லாத விசத்தன்மை கொண்ட திரவம் அல்லது திண்மத்தை உட்கொண்டு உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனையில் முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.