பாலாவுக்கு தாராளம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்

பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ், கால்ஷீட் விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்கிறாராம்.

ஜோதிகா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கணக்குப் பாடத்தில் அரியர் வைப்பதும், பாலா படத்தில் நடிப்பதும் ஒன்றுதான். எப்போது அதிலிருந்து ரிலீஸ் ஆவோம் என்பது யாருக்குமே தெரியாது. ஆனாலும், அந்த அவஸ்தையில் மாட்டிக் கொள்ள சிலர் விரும்புகிறார்கள். அவர்களில், ஜி.வி.பிரகாஷும் ஒருவர்.

‘நாச்சியார்’ படத்துக்காக அவர் கொடுத்த கால்ஷீட் முடிந்துவிட்டது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாதிக்கு மேல் படமாக்கப்படாமல் இருக்கிறதாம். ‘இன்னும் 3 மாசம் கால்ஷீட் கொடுங்க’ என்று பாலா கேட்டதும், பதறிப்போய் விட்டாராம் ஜி.வி. காரணம், ‘4ஜி’, ‘அடங்காதே’, ‘செம’, ‘குப்பத்து ராஜா’, ‘சர்வம் தாள லயம்’ என ஏகப்பட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.

அங்குதான் அவருடைய அதிர்ஷ்டம் வேலை செய்திருக்கிறது. ராஜிவ் மேனன் இயக்கத்தில் தற்போது ஆரம்பிக்கப்படுவதாக இருந்த ‘சர்வம் தாள லயம்’, 6 மாசத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது. எனவே, அதற்கு கொடுத்த கால்ஷீட்டை மொத்தமாகத் தூக்கி பாலாவுக்கு கொடுத்துவிட்டாராம் ஜி.வி.பிரகாஷ்.