நீரழிவு நோயாளி மது அருந்தியதால் ஏற்பட்ட வினை!! பரிதாபகரமாகப் பலி!!

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அளவுக்கதிகமாக மது அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலுப்பிள்ளை ஜீவராஜா (வயது 45) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவர் அண்மைக்காலமாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு மேலாக குடிப்பழக்கத்தை கைவிட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதன்முறையாக மது அருந்திவிட்டு உறங்கியுள்ளார். மறுநாளான நேற்றைய தினம் காலை அவரது மனைவி அவரை எழுப்பும் போது பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.

உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் காலை  7.15 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நண்பகல் 12.30 மணியளவில் பிரஸ்தாப குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

வைத்திய அறிக்கையின்படி குறித்த நபர் நீரிழிவு நோய் இருக்கும் போது  அளவுக்கதிகமாக மதுசாரம் அருந்திய காரணத்தால் உடலில் சீனியின் அளவு குறைவடைந்து குறித்த இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.