பணிப்பாளரின் காருடன் மோ.சைக்கிள் விபத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ப. சத்தியமூர்த்தியின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை பூநகரி முட்கொம்பன் சந்தியில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரி பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள முட்கொம்பன் 10ஆம் கட்டைப்  பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ப. சத்தியமூர்த்தி பயணித்த மோட்டார் கார் சென்று கொண்டிருந்த வேளை முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கத்தில்  இருந்த குறுக்கு வீதிக்குத் திரும்பியுள்ளது. 

இதன்போது காரும் மோ.சைக்கிளும் மோதுண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோ.சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக  ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5. 15 மணியளவில் நடைபெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் பூநகரி வெட்டுக்காடு, பரமன் கிராயைச் சேர்ந்த சுப்பையா- சிவகுருநாதன்  வயது 52 என்ற குடும்பஸ்தரே சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற  பூநகரி பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.