சளியை வெளியேற்றும் மருந்துகள்

காய்ச்சல், சளி ஆகிய தொல்லைகளின்போது உடலுக்கு உதவி செய்யும் சில உணவு மருந்துகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சளி வெளியேற்றத்திற்கு உதவி செய்யும் உணவு மருந்துகள்

மிளகு கசாயம்

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகு – 7 எண்ணிக்கை

இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும்.

இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு, இந்த நீரில் பின்வரும் இலைகளைப் போட வேண்டும்:

துளசி

கற்பூர வல்லி (ஓம வல்லி)

வேப்பிலைக் கொழுந்து

இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.

உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு பருகலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் பருக வேண்டும்.

தூதுவளை வறுவல்

தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும்.

மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

சீரகத் தண்ணீர்

ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.

சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது. செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர்செய்யவும் சீரக நீர் உதவியாக உள்ளது.

காய்ச்சலில் இருப்போர், சீரக நீர் பருக வேண்டாம். வெந்நீரை ஆறவைத்து மட்டுமே பருக வேண்டும். சளித் தொல்லையில் இருப்போரும், காய்ச்சலுக்குப் பின்னும், செரிமானச் சிக்கல் உள்ளோரும் சீரக நீர் பருகலாம்.