நல்லுாரில் பிடிபட்ட மதிப்புக்குரிய கௌரவ மாடுக் கள்ளன் ஐயா அவர்கள் அறிவது!!

என்ர மனச்சாட்சிப்படி நானும் ஒரு கள்ளன்தான். ஆனால் சமூகத்தில் இன்னும் பிடிபடாததால் கள்ளன் என்ட வரைவிலக்கணத்துக்குள் இன்னும் நான் அகப்படவில்லை. 

கள்ளன் என்டால் களவெடுக்கிறவன் கள்ளன் இல்லை. களவெடுத்து பிடிபடுறவன்தான் கள்ளன். ரியுசன் கரும்பலகையில எழுதுறதுக்காக பள்ளிக்கூட சோக்கட்டிய பொக்கற்றுக்குள்ள போடுற ரீச்சரும் கள்ளன்தான்.... சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நீங்கள் மாடு களவெடுத்துப் பிடிபட்டு சனத்திட்ட அடிவாங்கினதைப் பற்றி பேஸ்புத்தகங்களில கெம்பி எழுறாங்கள். குமுறுகிறாங்கள். உங்களுக்கு ஏன் இப்புடி அடிச்சது என்டும் கொதிக்கிறாங்கள். இதெல்லாத்தையும் பார்த்தவுடன பேசாமல் நானும் இந்த கேவலம் கெட்ட அரசாங்க வேலையை விட்டுப் போட்டு உங்களோட சேர்ந்துவிடலாமோ என்று தோன்றுது.

உங்களை கட்டி வைச்சிருக்கிறாங்களாம் என்டு விடியக்காலத்தால ஒருத்தன் எனக்கு ரெலிபோன் எடுத்தவுடன உங்கட திருமுகத்தப் பாக்க ஓடினன். அங்க நடந்த விசயங்களைப் பார்த்த போது எனக்கும் லேசா உங்களில கோவம்தான் வந்திச்சு. தனது உயிர் போல சொந்த உறவு போல வளர்க்கிற மாட்டை நீங்கள் பிடிச்சு இறைச்சிக்கு கொல்லத் திரிஞ்சிருக்கிறீங்கள் என்டுதான் கோவம் வந்திச்சு.

எனக்கு மாடுகளைப் பற்றி நல்லாத் தெரியும். அந்த மாடுகளை வளர்க்கிறவங்கள் பற்றியும் நல்லாத் தெரியும்.

கோப்பாய் தரவைக்குள்ள என்ர உறவுக்காரர்கள், அயலவர்கள் மாடு மேய விட்டு தோட்டத்துக்குள் கட்டுவது பற்றியும் ஒவ்வொரு மாடுகளுக்கும் ஒவ்வொரு பெயர் வைச்சு கூப்பிட்டு உறவாடுவது பற்றியும் நேரில் பார்த்துள்ளேன். கூட்டத்தோட மேயப் போற மாடு ஏமிலாந்திக் கொண்டு நின்டால் அந்த மாட்டுப் பெயரைக் கூப்பிட்டவுடன் எப்பிடி ஓடும் என்டும் தெரியும். உத்தியோகம் பார்த்துக் கொண்டு தோட்டமும் மாடுகளும் வளர்ப்பவர்கள் எங்கள் ஊரில் கன பேர் இருக்கிறார்கள்.

எங்கட ஊரிலும் உங்களைப் போல ஒரு கௌரவ கள்ளர் வந்து கன்றுத்தாச்சி மாடு ஒன்றை அறுத்து இறைச்சியை எடுத்துப் போட்டு குறைமாத கன்றையும் தலையையும் தோலையும் அந்த இடத்தில் போட்டுவிட்டுப் போன போது ஊரே கொதிச்சது. அதோட அந்த மாட்டை வளர்த்தவனும் குடும்பமும் அழுத அழுகை ஊருக்கே தெரியும். இதே போல் வீட்டுக்குள் வளர்த்த கிடாய் ஆடுகள் இரண்டு காணாமல் போனபோதும் இப்படி அழுது கொண்டுதான் திரிஞ்சவங்கள்.

எனக்கும் அதனால்தான் உங்களில கோவம் வந்தது. நீங்கள் கிட்டினி, கண், இதயம் போன்றவற்றுக்காக மனிசரைக் கடத்தி கொண்டு போயிருக்கலாம். சனம் கவலைப்பட்டுறாது. ஏனென்டால் சனத்துக்கு இஞ்ச இருக்கற மனுசரைக் கடத்திக் கொண்டு போறது பற்றி சொறனை கெட்டுப் போச்சு. ஜல்லிக்கட்டுக்கு நல்லுாரில கூடின சனம் காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தக்கு கூடவில்லை என்றும் தெரியும்.

நீங்கள் ஒரு அரச அதிகாரியின் மகன் என்றோ பிரபல தனியார் பாடசாலையில் படிச்ச மாணவன் என்றோ நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்றோ எனக்கு அப்போது தெரியவில்லை. அதோட உங்களை காப்பாற்ற உங்கட மனிசி நின்ற நிலையும் அவாவின் துணிச்சலும் மிக அற்புதமானவை. தன்ர அப்பாவின் வீர மறவர் குணம் உங்கட பெஞ்சாதிக்கு இருந்திருக்கு. தன்ர அப்பாவின் தொழிலை காதலிச்ச கலியாணம் கட்டின உங்களுக்கும் பழக்கியதை நினைக்க பெருமிதமா இருக்கு.

இப்பிடி என்ர மனிசி துணிச்சலா நின்டிருந்தால் நானும் எப்பவோ பெரிய ஆளா வந்திருப்பன். ஆனால் அவளவை விவாகரத்து பண்ண திரிவாளவை... அப்படியான கோழைகள் என்னைப் போன்றவர்களின் மனிசிமார்.

சங்ககால இலக்கியங்களில் பாலை நிலம் என்று ஒன்று இருந்ததாகவும் அதில் வாழ்ந்து வந்தவர்களின் குலத் தொழில் கௌரவ கள்ள வேலை என்பதாகவும் நான் அறிஞ்சிருக்கிறேன். கள்ளராகுவதற்கு பெரிதாக படிக்க தேவையில்லை. மனித உரிமை பற்றியும் ஊடக தர்மத்தில் கொஞ்சம் பற்றியும் தெரிஞ்சா காணும். உங்கட போட்டோக்களை ஊடகங்களில் பிரசுரிக்க கூடாது. அது ஊடக தர்மம் இல்லை என்டு நீங்கள் அச்சுறுத்தினால் காணும். பிறகு நீங்கள் செய்யிற எல்லாத்தையும் செய்து போட்டு ஜெயிலுக்குள்ள இருந்து வெளியால வந்தாலும் சனத்துக்கு நீங்கள் யார் என்டு தெரியாது. வடிவா பிறகும் தொழிலைத் தொடங்கலாம்.

கௌவ கள்ளர்கள், கொள்ளையர்கள் பற்றி தெரிந்து கொள்ள பல தடவை நான் யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளேன். அங்க உங்களைப் போன்ற கௌரவமானவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவுடன உங்களை கோட்டில் உள்ள சின்ன சிறைக் கூட்டுக்குள் அடைச்சுப் போடுவினம். அப்ப உங்களைப் பார்க்க வந்த உங்கட பெஞ்சாதி இல்லாட்டி அம்மா, இல்லாட்டி சகோதரி போன்ற உறவினர்கள் சைகை மூலம் உங்களுடன் கதைக்கிறதைப் பாத்திருக்கிறன். அவர்களிட முகத்தைப் பார்க்கையில் சரியான ஒரு வீரம் விளைஞ்ச முகமா இருக்கும். நீங்கள் ஜெயிலுக்கு செல்வதைப் பெருமையுடன் பார்்ததுக் கொண்டு இருப்பதை நான் அவதானிச்சிருக்கிறன்.

ஓசிச் சாப்பாடு நேரத்துக்கு நேரம் வழங்கப்படும். அதோட ஜெயிலுக்குள்ளவும் உங்கட நண்பர்கள் ராஜ்சியம். பிறகென்ன சொல்லி வேலையில்லை.

உங்களைப் போன்றவர்களை பொதுமக்கள் பிடிச்சவுடன கௌரவமான நீங்கள் உடன பொலிசட்ட குடுங்கோவன் என்டு சொல்லுறது ஏன் என்டு எனக்கு தெரியும். அப்படி பொதுமக்கள் கொடுக்காவிட்டால் உங்கட உறவினர்களே பொலிசிட்ட சொல்லி உங்களை பொதுமக்களிடம் இருந்து விடுவித்து பத்திரமாக கொண்டு போய் நீதிமன்றில் ஒப்படைத்துவிடுவார்கள்

உங்களுக்காக அங்க வாதாட உங்கட ஆக்கள் அங்க இருக்கிறாங்கள். அவங்களைக் கொண்டு நீங்கள் பெரும்பாலும் பிணையில வந்திடுவீங்கள். பிறகு உங்கள பிணையில் எடுத்து விட வாதாடினவங்களுக்காக நீங்கள் திருப்பவும் களவெடுத்தே அவர்களுக்கு காசு கொடுக்கிறனிங்கள் என்டு தெரியும்.

மாதத்தில 2,3 நாள் உங்ட தொழிலை செய்தால் சரி. பிறகு ராசா போல மோட்டுச்சயிக்கிள்களில பெஞ்சாதிகளையும் கொண்டு திரியலாம். பாக்கிறவன் உங்களை ஏதோ பெரிய பிசினஸ் செய்யிறவன் என்டும் நினைப்பாங்கள். நீங்களும் அப்பிடித்தான் சொல்லுறனிங்கள் என்டும் தெரியும். அதோட பிசினஸ்காரங்கள் என்டு திரியிறவங்களும் உங்களைப் போன்றவங்கள்தான்.

இப்ப ஏன் இவ்வளவையும் சொல்லுறன் என்டால் உங்களை போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் உங்களைப் பெரிய கிங் ஆக்கி விட்டுட்டன். நீங்கள் ஆசுப்பத்திரியில குணமாகினவுடன என்னையும் உங்களோட சேர்த்து விடுங்கோ. நானும் தொழிலுக்கு வாறன்.

வந்து உங்களைப் பற்றி முகப்புத்தகத்தில பெருமையா கதைக்கிறவங்களை விட்டு விட்டு மற்ற எல்லாரிட வீடுகளிலும் கொள்ளையடிப்பம். ஆளுக்கு பாதி...பாதி.... ஓகேஃஃஃஃஃ எக்கச்சக்கமா எழுத வேணும் போல கிடக்குது. ஆனால் நீங்களும் வாசிக்க அலுப்பாகும்....

குறிப்பு - உங்களைப் பார்ப்பதற்கு இன்டைக்கு நான் யாழ்ப்பாண பெரியாஸ்பத்தில இருக்கிற 30ம் வாட்டுக்கு வந்தனான். உங்கட மனிசி உங்களை பத்திரமா பாத்து உங்களோட நின்டதைப் பார்க்க எனக்கு வாழ்க்கை வெறுத்திட்டு. தோடம்பழம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீங்கள். உங்களுக்கு 2 பொலிஸ் பாதுகாப்பும் கொடுத்திருக்கு. உங்களுக்கு பக்கத்தில வாறதுக்கு இடையில பொலிசு என்னை அங்கால போகச் சொல்லிட்டுது. இல்லாட்டி அதிலையே உங்கட அமைப்பில அங்கத்தவரா சேர்ந்திருப்பன்....

நன்றி

facebook