ஒளிப்பதிவாளரை மாற்றிய கெளதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஒளிப்பதிவாளரை மாற்றியுள்ளார். 

தனுஷ், மேகா ஆகாஷ், ராணா டகுபதி நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வந்தார் கெளதம் மேனன். இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோமன் டி.ஜான் என்பவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். என்ன காரணத்தினாலோ அந்தப் படத்தை முடிக்காமலேயே விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இந்தப் படத்திலும் ஜோமனே ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்தார்.

ஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து ஜோமன் விலகியிருக்கிறார். அஜய் தேவ்கன், பரினிதி சோப்ரா, தபு நடிக்கும் படத்தில் ஏற்கெனவே கமிட்டாகி இருந்ததாகவும், அந்தப் படத்துக்காக இதிலிருந்து விலகியதாகவும் ஜோமன் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மகன் சந்தானகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 23 வயதான சந்தானகிருஷ்ணன், பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.