யாழ். நண்பர்களின் சமர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரிக்கும் இடையிலான ‘நண்பர்களின் போர்’ கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

5 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட முன்னாள் துடுப்பாட்ட பயிற்றுனர் வி.கே.சண்முகலிங்கம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்றைய முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக, ஒரு சில ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. இறுதி நாள் போட்டி, நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையே இடம்பெற்ற 4 போட்டிகளில், 3 போட்டிகளை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் வெற்றி கொண்டுள்ளது.

கடந்த வருடம் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.